“உணர்வுப்பூர்வமான பல நிகழ்வுகளுக்கு இந்த நாடாளுமன்றம் சாட்சியாக இருந்துள்ளது!”- பிரதமர் மோடி உரை!
நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர், “வரலாற்று சிறப்புமிக்க பழைய நாடாளுமன்றத்திற்கு பிரியாவிடை கொடுத்து விட்டோம். ஒவ்வொரு இந்தியரின் வியர்வையாலும், பணத்தாலும் இந்த நாடாளுமன்றம் என்பது கட்டப்பட்டது. இந்தியா முழுவதும் மாற்றத்திற்கான அலையானது உருவாகியுள்ளது. சந்திராயன் 3 ன் வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் பெருமையடைய செய்துள்ளது. அதுமட்டுமல்லாது தற்போது நடைபெற்ற ஜி 20 மாநாட்டால் இந்தியா குறித்த எதிர்மறை எண்ணங்களும் மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் தலைமைத்துவம் குறித்து எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஜி 20 மாநாடு விடையளித்துள்ளது.
பழைய நாடாளுமன்றமான இது, பல உணர்வுப்பூர்வமான நினைவுகளை கொண்டுள்ளது. இதற்கு விடைகொடுக்கும் நேரம் வந்துவிட்டது.
முதன் முறையாக நாடாளுமன்றத்திற்குள் நுழையும் போது விழுந்து வணங்கிய பிறகே உள்ளே வந்தேன். இப்படிப்பட்ட நாட்டின் பன்முகத்தன்மையை பறைசாற்றும் நாடாளுமன்றம் அனைத்து தரப்பையும் உள்ளடக்கியதாக இருக்கும். பெண் எம்.பிக்களின் பங்களிப்பு என்பது நாடாளுமன்றத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. கொரோனா காலத்திலும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் பார்த்து கொண்டோம். பல தடைகளை கடந்து நாம் முன்னேறி கொண்டிருக்கின்றோம்.
நாடாளுமன்றம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம். கடந்த 75 ஆண்டுகளாக நாடாளுமன்றம் மீது அசைக்க முடியாத அளவிற்கு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். உணர்வுப்பூர்வமான பல நிகழ்வுகளுக்கு இந்த நாடாளுமன்றம் சாட்சியாக இருந்துள்ளது. நாடாளுமன்றத்தின் அனைத்து பணியாளர்களுக்கும் என் பணிவான வணக்கங்களை தெரிவிக்கிறேன்.
நாட்டின் பொருளாதார சுமையை குறைக்க நரசிம்மராவ் தமைமையிலான அரசு பாடுபட்டது. இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்தவர் அம்பேத்கர். பசுமை புரட்சிக்கான புதிய திட்டத்தை வகுத்தவர் லால் பகதூர் சாஸ்திரி. நேரு, வாஜ்பாய், மன்மோகன் சிங் உள்ளிட்ட பிரதமர்கள் இந்த நாடாளுமன்றத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இந்த நாளில் நாடாளுமன்றத்தை காக்க போராடியவர்களை நினைவுகூர்கிறேன். நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல், ஜனநாயகம் மீதான தாக்குதல் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நம்பிக்கை, உத்வேகத்தோடு தொடர்ந்து நாம் முன்னேறி செல்ல வேண்டும். வரலாற்றுக்கும், எதிர்காலத்திற்கும் இணைப்பு பாலமாக நாம் இருக்கிறோம்” என்றார்.