“அரசு கொண்டுவந்த மாற்றத்தால் ஆண் துணையின்றி ஹஜ் பயணம் மேற்கொண்ட இஸ்லாமிய பெண்கள்!” – பிரதமர் மோடி
ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் மனதின் குரல் என்ற வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அப்படி இந்த மாதத்தின் இறுதி ஞாயிறன்று மனதின் குரல் நிகழ்ச்சி வழியாக உரையாற்றிய பிரதமர் மோடி, “எங்களது அரசு கொண்டு வந்த மாற்றத்தால், இந்த ஆண்டு 4,000-த்துக்கு மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள், ஆண்துணை இன்றி ஹஜ் புனித பயணம் மேற்கொண்டுள்ளனர். இது மிகப்பெரிய மாற்றம். ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு ஆண்துணை அவசியம் என்ற நிபந்தனையை தளர்த்தியது, பல பெண்களுக்கு பயனளித்துள்ளது” என கூறினார்.
மேலும் ஹஜ் புனித பயணம் சென்று திரும்பிய ஏராளமான பெண்களிடம் இருந்து நன்றி கடிதங்களை பெற்றிருப்பதாக மோடி கூறினார். ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றவேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர் கடந்த 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பழமையான கலை பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதை நினைவுகூர்ந்தார். இதற்காக அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக மோடி தெரிவித்தார்.