ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதேபோல் இந்தாண்டும் ஹிமாச்சல பிரதேச மாநிலம் லெப்சா என்ற இடத்தில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக பிரதமர் கொண்டாடினார்.
இந்த கொண்டாட்டத்தில் ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, “கடந்த 30 முதல் 35 ஆண்டுகளாகவே ராணுவ வீரர்கள் இல்லாமல் நான் தீபாவளி கொண்டாடுவதில்லை. நாட்டின் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புக்கு உறுதுணையாக ராணுவ வீரர்கள் உள்ளனர். எந்த சவாலையும் சந்திக்க ராணுவ வீரர்கள் தயாராக உள்ளனர்.
ராமர் எங்கு இருக்கிறாரோ அந்த இடம்தான் அயோத்தி என கூறுவார்கள். என்னை பொறுத்தவரை ராணுவ வீரர்கள் உள்ள இடமே எனக்கு அயோத்தி. 140 கோடி மக்களும் ராணுவ வீரர்களுடன் உள்ளனர். ஒவ்வொரு இந்தியரும் இந்த வீரர்களுக்காக பிரார்த்திக்கின்றனர்” என்றார்.
கடந்த பத்து ஆண்டுகளாக பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் பிரதமராக தீபாவளியை கொண்டிவருகிறார். 2021ஆம் ஜம்மு காஷ்மீரில் உள்ள நவ்ஷேராவிலும், 2022ஆம் ஆண்டு கார்கிலிலும் பாதுகாப்பு படையினருடன் கொண்டாடிய பிரதமர் இந்த ஆண்டு லெப்சாவில் உள்ள வீரர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.