தமிழகத்தில் ரஜினி, கமலுடன் கூட்டணியா? - பிரதமர் மோடி பதில்

தமிழகத்தில் ரஜினி, கமலுடன் கூட்டணியா? - பிரதமர் மோடி பதில்
தமிழகத்தில் ரஜினி, கமலுடன் கூட்டணியா? - பிரதமர் மோடி பதில்
Published on

தமிழகத்தில் காலூன்ற ரஜினி, கமலுடன் பாஜக கூட்டணி அமைக்க முயற்சிக்கிறதா? என்ற கேள்விக்கு சூசகமாக மோடி பதிலளித்தார். 

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். பிரதமராக தாம் ஆற்றிய பணி திருப்திகரமாக இருந்ததா? இல்லையா? என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை மக்களிடமே விட்டுவிட்டதாக கூறியுள்ள பிரதமர், மக்கள் நலனுக்காகவே செயல்பட்டு வரும் தமக்கு, பொதுமக்கள் தேர்தலில் நல்ல முடிவை தருவர் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த மோடி, அத்தேர்தல் மக்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையேயான மோதலாக இருக்கும் என பதிலளித்தார். மக்களின் நலனுக்காகவே செயல்பட்டுவரும் தமது பணி திருப்திகரமாக இருந்ததா? இல்லையா? என்பதை தீர்மானிக்கும் முடிவை மக்களிடமே விட்டுவிட்டதாகவும் கூறினார். தமது பணிக்கு இந்திய நாட்டு மக்கள் நல்ல முடிவை தருவர் என தாம் நம்புவதாகவும் பதிலளித்தார்.

5 மாநிலத் தேர்தலில், 2 மாநிலங்களில் தொங்கு சட்டமன்றம் அமையும் அளவுக்கு பாஜகவுக்கு ஆதரவு இருந்ததாக கூறிய பிரதமர், 2018-ஐ வெற்றிகரமான ஆண்டாக தாம் கருதுவதாக கூறினார். எந்த இடத்தில் பின் தங்கியிருக்கிறோம் என்பது குறித்து ஆலோசித்து வருவதாக அவர் தெரிவித்தார். தமிழகத்தில் காலூன்ற ரஜினி, கமலுடன் பாஜக கூட்டணி அமைக்க முயற்சிக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த மோடி, தமிழகத்தில் ஏற்கனவே தங்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரை பெற்றுள்ளதாக கூறினார். தங்களுடன் ஒருமித்து ஒத்த சிந்தனையுடன் வருபவர்களுடன் இணைந்து பயணிக்க தயாராக உள்ளதாகவும் கூறினார்.

பண மதிப்பிழப்பு நீக்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அது திடீரென எடுக்கப்பட்ட நடவடிக்கை இல்லை என்றார். கறுப்பு பணம் வைத்திருந்தவர்களை ஓராண்டுக்கு முன்பே எச்சரித்ததாகக் கூறினார். ஆனால் மற்றவர்களைப் போல துணிச்சலாக ஏதும் செய்யமாட்டேன் என பலரும் நினைத்துவிட்டதாகவும் தெரிவித்தார். துல்லியத் தாக்குதல் நடத்தியபோது ராணுவ வீரர்கள் குறித்து கவலை கொண்டிருந்ததாகவும், தாக்குதலில் வென்றாலும், தோற்றாலும் சூரிய அஸ்தமனத்துக்கு முன் திரும்புமாறு உத்தரவிட்டிருந்ததாகவும் தெரிவித்தார். மேலும் எந்த ஒரு வீரரும் உயிரிழக்கக்கூடாது என்பதில் தாம் உறுதியாக இருந்ததாக மோடி கூறினார்.

ராமர் கோவில் விவகாரத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளை காங்கிரஸ்தான் தாமதப்படுத்தியது என குற்றஞ்சாட்டிய அவர், சட்ட நடைமுறைகள் முடிந்த பிறகே, ராமர்கோவிலுக்கு அவசரச்சட்டம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார். ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து விலகிய உர்ஜித் படேலின் பணி குறித்து பாராட்டு தெரிவித்த பிரதமர், அவர் பதவி விலகியதில் அரசியல் நிர்பந்தங்கள் ஏதும் இல்லை எனத் தெரிவித்தார்.

முத்தலாக் விவகாரம் குறித்து பேசிய அவர், அது ஆண்-பெண் சமத்துவம் தொடர்பானது என்றார். அதில் சட்டரீதியான தீர்வை ஏற்படுத்துவதே தங்களின் நோக்கம் எனவும் தெரிவித்தார். சபரிமலை தொடர்பான கேள்விக்கு, அது கோயில் பாரம்பரியம் சார்ந்தது என நீதிபதி விளக்கியுள்ளதாகவும், அதுவே தங்களின் நிலைப்பாடு என்றும் அவர் பதிலளித்தார். பாகிஸ்தான் குறித்த கேள்விக்கு பதிலளித்த மோடி, எல்லையில் நடைபெறும் தீவிரவாதம் முடிவுக்கு வருதல் வேண்டும் என்றார். கடந்த காலங்களை காட்டிலும் தாக்குதல் சம்பவங்கள் குறைந்துள்ளதாக கூறிய அவர், பேச்சுவார்த்தைக்கு தமது அரசு எதிரானது அல்ல என கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com