ஏற்கெனவே ஏராளமான நேரம் வீணாகி விட்டது, இளைஞர்கள் இனி புதிய இந்தியாவை உருவாக்கும் பணியைத் தொடங்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி தொடர்ந்து பங்கேற்று வருகிறார். கான்பூரில் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 11 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 32 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் முதற்கட்டமாக பணிகள் முடிந்த 9 கிலோ மீட்டர் தொலைவுக்கான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பின்னர், மெட்ரோ ரயிலிலும் அவர் பயணித்தார். முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி ஆகியோரும் உடன் பயணித்தனர். பின்னர், கான்பூர் ஐஐடியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்றார்.
அதில் அவர் பேசுகையில், ஏற்கெனவே ஏராளமான காலம் வீணாகி விட்டதால், புதிய இந்தியாவுக்கான பணிகளை இளைஞர்கள் உடனே தொடங்கவேண்டும் என்று வலியுறுத்தினார். நாடு சுதந்திரம் அடைந்தபிறகு 25 ஆண்டுகளில் ஏராளமான பணிகளை செய்திருக்கமுடியும் என்ற பிரதமர், ஆனால் ஏராளமான நேரம் வீணாகி விட்டதாகவும் குறிப்பிட்டார். முன்னதாக, மாணவ, மாணவிகளிடையே மோடி கலந்துரையாடினார்.