ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுத்ததன் மூலம், அவர்களை லட்சாதிபதிகளாக்கிவிட்டதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
ஏழைகளை நாங்கள் லட்சாதிபதிகளாக்கி இருக்கிறோம். நாட்டில் எவ்வளவோ லட்சாதிபதிகள் உள்ளனர். எதுவுமே இல்லாதவர்களை, வீட்டிற்கு உரிமையாளர்களாக்கி இருப்பதால், அவர்கள் லட்சாதிபதிகளாக மாறியிருக்கிறார்கள். கடந்த 4 ஆண்டுகளில் 3 கோடி ஏழைகளை லட்சாதிபதிகளாக்கி இருக்கிறோம் என்று கூறினார்.
மத்திய நிதிநிலை அறிக்கை குறித்து, ஆத்மநிர்பார் என்ற பெயரில் காணொளி வாயிலாக பாஜகவினர் இடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அதில், தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார். தற்சார்பு பொருளாதாரமாகவும் அதேநேரம் நவீனமயமாகவும் இருக்க வேண்டியது அவசியம் என்ற அவர், கடந்த 7 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அதை நோக்கி தொடர்வதாகத் தெரிவித்தார்.
இந்தியா மீதான உலகத்தின் பார்வை பெரிதும் மேம்பட்டிருப்பதாகவும் வலிமையான இந்தியாவை உலகம் விரும்புவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியப் பொருளாதாரம் திருப்புமுனையில் இருப்பதாகவும், கொரோனாவுக்குப் பிந்தைய புதிய உலகில் இந்தியாவுக்கு அதிக முக்கியத்துவம் இருக்குமென்றும் பிரதமர் பெருமிதத்துடன் கூறினார்.
நாட்டின் எல்லைப் பகுதி கிராமங்களின் வளர்ச்சிக்கு நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர், எல்லையோரப் பள்ளிகளில் என்.சி.சி. மையங்கள் அமைக்கப்படும் என்றார். இந்திய வேளாண் துறையை நவீனப்படுத்த பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறிய மோடி, ட்ரோன்கள் மூலம் சேவைகள் மற்றும் இயற்கை விவசாய வசதிகள் குறைந்த விலையில் விவசாயிகளுக்கு கிடைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.