பிரதமர் நரேந்திர மோடியின் வானொலி நிகழ்ச்சியான 'மன் கி பாத்' 2014-ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து ரூ.30.80 கோடிக்கு மேல் வருவாயை ஈட்டியுள்ளது என்று மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்தது.
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றும் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனின் பல்வேறு சேனல்கள் மூலம் ஒளிபரப்பப்படுகிறது. இதுவரை 'மன் கி பாத்'தில் 78 நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகியுள்ளது என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் 2014-15 ஆம் ஆண்டில் ரூ 1.16 கோடியும், 2015-16 ஆம் ஆண்டில் ரூ 2.81 கோடியும், 2016-17ல் ரூ 5.14 கோடியும், 2017-18 ஆம் ஆண்டில் ரூ 10.64 கோடியும் வருமானம் ஈட்டப்பட்டது. இது, 2018-19-ல் ரூ 7.47 கோடி வருமானத்தையும், 2019-20-ல் ரூ 2.56 கோடியையும், 2020-21ல் ரூ 1.02 கோடியையும் வருமானமாக ஈட்டியது எனவும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
தொலைக்காட்சி சேனல்களின் ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் (BARC) அளவிட்ட பார்வையாளர்களின் தரவுகளின்படி, இந்த நிகழ்ச்சியை 2018 முதல் 2020 வரை சுமார் ஆறு கோடி முதல் 14.35 கோடி பார்வையாளர்கள் பார்வையிட்டார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.