விராட் கோலியின் சவாலை ஏற்று தனது ஃபிட்னஸ் தொடர்பான வீடியோவை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரும், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான ராஜ்யவர்தன் ரத்தோர் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு ட்வீட் செய்திருந்தார். அதில், நாம் ஃபிட்டாக இருந்தால் தான் நாடு ஃபிட்டாக இருக்கும். அதனால் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, விராட் கோலி, சாய்னா நேவால், ஹிர்த்திக் ரோஷன் ஆகியோருக்கு டேக் செய்திருந்தார். அவர்களும் இதுபோல் தங்கள் உடற்தகுதியை நிரூபிக்கும் வகையில் வீடியோ வெளியிட வேண்டும் என சவால் விடுத்திருந்தார்.
இதையடுத்து, ரத்தோரின் சவாலை ஏற்றுக்கொண்ட கோலி, தானும் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு, அதில் தன் மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி, டோனி ஆகியோரை டேக் செய்தார். கோலியின் சவாலை ஏற்றுக்கொள்வதாக பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்திருந்தார். விரைவில் தன்னுடைய உடற்தகுதி குறித்த வீடியோவை ட்விட்டர் தளத்தில் பகிர்வேன் எனவும் மோடி பதில் அளித்தார். இந்நிலையில் பிரதமர் மோடி தனது ஃபிட்னஸ் தொடர்பான வீடியோவை இன்று வெளியிட்டுள்ளார். மோடி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த வீடியோ மொத்தமாக 1.48 நிமிடம் உள்ளது. இதில் பிரதமர் மோடி உடற்பயிற்சி மற்றும் யோகா செய்கிறார். இதுமட்டுமில்லாமல் கூலாங்கற்கள் மீதும் பிரதமர் மோடி நடக்கிறார். இதுதவிர கர்நாடாக முதலமைச்சர் குமாரசாமிக்கும் பிரதமர் மோடி ஃபிட்னஸ் சேலஞ்ச் விடுத்துள்ளார். அதுபோல துணிச்சலான 40 வயதிற்கும் மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபிட்னஸ் சேலஞ்ச் விடுத்துள்ளார்.