பிரதமர் மோடியுடன் இன்று நடந்த காணொலி ஆலோசனையின்போது, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதை நேரலையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பியது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி கண்டிப்பு காட்டிய நிலையில், டெல்லி முதல்வர் அலுவலகம் வருத்தம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுடனான உயர்நிலைக் கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேசுவது நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிறது என்பது தெரிந்தவுடன், பிரதமர் நரேந்திர மோடி 'அது தவறான செயல்' என காணொலி ஆலோசனையிலேயே குறிப்பிட்டார். இந்த ஆலோசனை என்பது அரசு துறைகளின் ஆலோசனை என்றும், இதுபோன்ற ஆலோசனைகளை நேரலையாக ஒளிபரப்பு செய்வது மரபல்ல என்றும் பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டினார்.
வேறு எந்த முதல்வரும் தாங்கள் பேசும்போது இதுபோல நேரலை ஒளிபரப்பு ஏற்பாடு செய்யவில்லை. மத்திய அரசும், பிரதமர் நரேந்திர மோடி பேசியதை ஒளிபரப்பு செய்யவில்லை.
பிரதமர் மோடி கண்டிப்பு காட்டியவுடன், இந்த விவகாரத்தில் உடனடியாக மன்னிப்புக் கோரிய டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், அப்படி செய்யக்கூடாது (நேரலை) என தனக்கு தெரியாது என விளக்கமளித்தார். தன் தரப்பில் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், இனிமேல் இப்படி நடக்காது எனவும் கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தனது இல்லத்தில் இருந்து இந்தக் காணொலி ஆலோசனையில் கலந்துகொண்டபோது, அதை நேரலை ஒளிபரப்பு செய்ய தொலைக்காட்சிகள் மூலம் ஏற்பாடு செய்திருந்தது, இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. கெஜரிவால் பேசிக்கொண்டிருக்கும்போதே நேரலை ஒளிபரப்பு குறித்த தகவல், பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டு அவர் உடனடியாக கெஜ்ரிவாலை காணொலி ஆலோசனையின் போதே கண்டித்தார்.
பிரதமரின் கண்டிப்புக்கு பிறகு, மத்திய அரசு அளித்திருக்கும் பரிந்துரைகள் சிறப்பானவை என்றும், மத்திய அரசின் உத்தரவுகள் அனைத்தையும் பின்பற்ற தயார் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்தார். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தேசிய அளவில் ஒரு கொள்கை திட்டமாக அமல்படுத்தினால், அதற்கு சம்மதம் தெரிவிப்பதாகவும் கெஜ்ரிவால் பேசினார். பின்னர் கெஜ்ரிவாலை காணொலியில் மோடி கண்டித்த பதிவு, ஊடகங்களுக்கு கசிந்தது.
இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் கெஜ்ரிவால் உள்ளிட்ட பதினோரு முதல்வர்கள் கலந்து கொண்டார்கள். இவர்களைத் தவிர உள்துறை அமைச்சராக அமித் ஷா மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகளும் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டார்கள்.
காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனையில் முதல்வர்கள் தங்களுடைய மாநிலத்தின் தற்போதைய நிலை என்பதை என்ன என்பதை தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்துகள் பற்றாக்குறை மற்றும் தடுப்பூசி திட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனைகளை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்போது கொரோனாவுக்கு எதிராக ஒரே நாடு என்ற உணர்வுடன் பணியாற்றுவோம் என்று பேசிய பிரதமர் மோடி, ஒருங்கிணைந்த முயற்சிகளால், நாடு முழுவதும் கோவிட் தொற்றின் இரண்டாவது அலையையும் நம்மால் தடுத்து நிறுத்த முடியும் என்று நம்பிக்கை அளித்தார். (விரிவாக வாசிக்க > 'ஒரே நாடு' என்ற உணர்வுடன் பணியாற்றுவோம்: மாநிலங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு)
வருத்தம் தெரிவித்த டெல்லி முதல்வர் அலுவலகம்:
"நான் ஒரு முதல்வராக இருந்தாலும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை" என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் காணொலி மூலம் உரையாடும்போது 'ஆக்சிஜன் பற்றாக்குறை' குறித்த தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்தினார். (விரிவாக வாசிக்க - "யாருகிட்ட போவேன்?!" - பிரதமர் மோடியிடம் வருந்திய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்)
இந்த விவாதத்தை கெஜ்ரிவால் அலுவலகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியதை மோடி கடுமையாக ஆட்சேபித்தார். ரகசியத்தன்மைக்கு ஒரு நடைமுறை உள்ள நிலையில், ஒரு முதல்வர் நேரடி ஒளிபரப்பு செய்வது பொருத்தமற்றது என பிரதமர் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது நமது பாரம்பரியத்திற்கும் நெறிமுறைகளுக்கும் எதிரானது என்று மோடி கூறியுள்ளார்.
இந்த நிலையில், டெல்லி முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், 'முதல்வரின் உரை நேரலையில் பகிரப்பட்டது தொடர்பாக எழுத்துபூர்வமாகவோ அல்லது வாய்மொழியாகவோ எந்தவொரு அறிவுறுத்தலும் வழங்கப்படாததால், அது நேரலையில் ஒளிபரப்பட்டது. இதனால் ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்' என்று தெரிவித்துள்ளது.
- கணபதி சுப்ரமணியம்