அக்டோபர் 2016 முதல் அதிகரித்து வரும் யுபிஐ பரிவர்த்தனையை வரைபடமாக்கி அதை டிஜிட்டல் ஒலிக்கோவையாக மாற்றிய “இந்தியா இன் பிக்ஸல்ஸ்” நிறுவனத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி!
பணமதிப்பிழப்பு அமலான நவம்பர் 2016 முதல் இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஜெட் வேகத்தில் அதிகரிக்கத் துவங்கின. பெரும்பாலான மக்கள் யுபிஐ உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளை முன்பை விட அதிகமாக மேற்கொண்டனர். அக்டோபர் 2016 முதல் அதிகரித்து வரும் யுபிஐ பரிவர்த்தனையை வரைபடமாக்கி வெளியிட்டுள்ளது “இந்தியா இன் பிக்ஸல்ஸ்” என்ற டிவிட்டர் பக்கம்.
வெறுமனே எண்களையும் கோடுகளையும் வைத்து வரைபடத்தை வெளியிடாமல், கோடுகளின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப இசையை எழுப்பும் ஒலிக்கோவையை உருவாக்கி வெளியிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு அமலான மார்ச் 2020 கால கட்டத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் சுணக்கம் ஏற்பட்டதையும் ஒலிக்கோவை வரைபடத்தில் சரியாக குறிப்பிட்டுள்ளது.
இந்த ஒலிக்கோவை வரைபடத்தை பிரதமர் நரேந்திர மோடி வெகுவாக பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “யுபிஐ மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பற்றி நான் அடிக்கடி பேசியிருக்கிறேன். ஆனால், டேட்டா சோனிஃபிகேஷன் மூலம் பணப் பரிமாற்றத்தின் ஒலியை நீங்கள் எப்படிப் பயன்படுத்திக் கொண்டீர்கள் என்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மிகவும் சுவாரஸ்யமான, ஈர்க்கக்கூடிய மற்றும் வெளிப்படையாக தகவல்!” என்று பாராட்டியுள்ளார்.