செய்தியாளர்: விக்னேஷ் முத்து
பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் உள்ள வேட்பாளர்களை ஆதரித்தும், பாஜக வேட்பாளர்களுக்காகவும் பிரதமர் நரேந்திரமோடி வாக்கு சேகரிக்க வரும் 9 ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார். வேலூர், தென் சென்னை, நீலகிரி, கோவை, பெரம்பலூர், விருதுநகர் ஆகிய 6 நாடாளுமன்ற தொகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
வரும் 9 ஆம் தேதி மாலை 4 மணிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து வேலூரில் வாகன பேரணியில் ஈடுபடுகிறார். அன்று மாலை 6 மணிக்கு தென்சென்னை வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து சென்னையில் வாகனப் பேரணி செல்லவிருக்கிறார் பிரதமர்.
வரும் 10 ஆம் தேதி காலை 11 மணியளவில் பாஜக வேட்பாளர் எல். முருகனை ஆதரித்து நீலகிரியில் வாகன பேரணி செல்லும் பிரதமர், கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையை ஆதரித்து கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
ஏப்ரல் 13-ஆம் காலை 11 மணியளவில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தரை ஆதரித்து பெரம்பலூரில் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு வாக்குசேகரிக்கும் பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 14 ஆம்தேதி, காலை 11 மணி அளவில், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரை ஆதரித்து விருதுநகரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பிரசாரம் செய்கிறார்.