ஜி 20 உச்சி மாநாட்டுக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடி, தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசாவை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அர்ஜென்டினா தலைநகர் ப்யூனஸ் அயர்ஸில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு கடந்த இரு நாட்களாக நடைபெற்று வந்தது. இறுதி நாளில் தென் ஆப்பிரிக்க அதிபரை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும்படி அவருக்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை அவரும் ஏற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து ட்விட்டரில் இந்தத் தகவலை உறுதி செய்த பிரதமர் நரேந்திர மோடி, தென் ஆப்பிரிக்க நாட்டுடன் நெருங்கிய உறவு வைத்திருந்த மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது, இந்தியாவுக்கு கிடைத்த பெருமை என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கலையும் பிரதமர் மோடி சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.