ஆயுஷ்மான் பாரத் எனப்படும் மருத்துவ பாதுகாப்பு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார். ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் நடைபெறும் விழாவில் பிரதமர் இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
50 கோடி ஏழை எளிய மக்களின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் இத்திட்டம் உலகின் மிகப்பெரிய மருத்துவ பாதுகாப்பு திட்டமாக கருதப்படுகிறது. இத்திட்டத்தின்படி ஒரு ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை ஆகும் மருத்துவ செலவுகளை அரசே வழங்கிவிடும். சமூக பொருளாதார கணக்கெடுப்பு புள்ளிவிவரத் தகவல்கள் அடிப்படையில் பயனாளிகள் அடையாளம் காணப்படுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.
கூலித்தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள், வீட்டு வேலைக்காரர்கள், காலணி பழுதுபார்ப்பவர்கள், சுமை தூக்குபவர்கள் உள்ளிட்ட 11 வகையான தொழிற் பிரிவுகளில் இருப்பவர்கள் அரசின் உதவியை பெற தகுதியானவர்கள் ஆவர். ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு அட்டையை வைத்தே அரசின் சலுகையை ஏழை மக்கள் பெற முடியும்.