குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதா அணி சார்பில் ஜெகதீப் தன்கர் 528 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் மார்க்கரெட் ஆல்வா 182 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.
நாட்டின் 14-வது புதிய குடியரசுத் துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வாக்குப்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கியது. பிரதமர் மோடி, அமைச்சர்கள், எம்பிக்கள் அடுத்தடுத்து வாக்களித்தனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் வந்து தனது வாக்கை பதிவு செய்தார். மாலை 5 மணிக்கு வாக்குபதிவு நிறைவடைந்த உடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கின. இந்தத் தேர்தலில் பாஜக அணியில் போட்டியிட்ட ஜெகதீப் தன்கர் 528 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவுக்கு 182 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
இதனையடுத்து நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கர் ஆகஸ்ட் 16-ம் நாள் பதவி ஏற்றுக் கொள்கிறார். குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜகதீப் தன்கருக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜகதீப் தன்கரை பிரதமர் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறினார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் ஜகதீப் தன்கருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
தேர்தலில் தன்கரிடம் தோல்வியுற்ற மார்க்ரெட் ஆல்வா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் ஜகதீப் தன்கருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். மேலும் இந்தத் தேர்தலில் 15 வாக்குகள் செல்லாதவை ஆக அறிவிக்கப்பட்டது.