மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிர்பிழைத்து தற்போது 13 வயதை எட்டியுள்ள இஸ்ரேலைச் சேர்ந்த சிறுவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு 166 பேரின் உயிரைப் பறித்த மும்பை பயங்கரவாத தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த தம்பதியினரும் உயிரிழந்தனர். அதில் 2 வயது குழந்தையான மோஷி நல்வாய்ப்பாக உயிர்தப்பினான். பின்னர் குடும்பத்தாருடன் இஸ்ரேல் அனுப்பிவைக்கப்பட்ட குழந்தை மோஷியை, கடந்த 2017-ஆம் ஆண்டு இஸ்ரேல் சென்ற மோடி சந்தித்தார்.
இதையடுத்து 2018-ஆம் ஆண்டு இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் இந்தியா வந்தபோது, சிறுவன் மோஷியும் உடன் வந்திருந்தார். தற்போது 13 வயதை எட்டியுள்ள சிறுவன் மோஷிக்கு, யூத வழக்கப்படி கயிறு கட்டும் விழா நடைபெறவுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி கடிதம் வாயிலாக சிறுவன் மோஷிக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
மிகுந்த சோகத்தையும், ஈடு செய்ய முடியாத இழப்பையும் விஞ்சிய உன் கதை, ஒவ்வொருவருக்கும் உந்துதலை தரக்கூடியது என மோடி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். கடிதத்தை இஸ்ரேலுக்கான இந்திய தூதர் சிறுவன் மோஷியிடம் நேரில் அளித்தார். மோடியின் கடிதத்தால் சிறுவன் மோஷி நெகிழ்ச்சியடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.