தமிழகத்தைச் சேர்ந்த கணித மேதை சி.எஸ். சேஷாத்ரி (88) மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சி. எஸ். சேஷாத்ரி காஞ்சிபுரத்தில் பிப்ரவரி 29 ஆம் தேதி 1932 இல் பிறந்தார். இவர் ஒரு கணிதவியலாளர் ஆவார். இவர் சென்னை கணிதவியல் கழகத்தின் நிறுவனர் மற்றும் ஓய்வு பெற்ற இயக்குனர் போன்ற பொறுப்புகளை வகித்தவர்.
கணிதத்தில் இவரது பங்களிப்புக்காக சேஷாத்ரி கான்ஸ்டண்ட் என அழைக்கப்படுகிறது. சேஷாத்ரிக்கு 2009 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. சிஎஸ் சேஷாத்ரி உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். அவருக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில் "பேராசிரியர் சி.எஸ்.சேஷாத்ரி மறைந்த செய்தி அறிந்து வருத்தமுற்றேன். கணிதத்தில் பல்வேறு சாதனைகளை புரிந்த அறிவுஜீவியை நாம் இப்போது இழந்திருக்கிறோம். அவர் மறைந்தாலும் அவருடைய சாதனைகள் போற்றப்படும். மிக முக்கியமாக அல்ஜீப்ரா ஜியோமெட்ரியில் அவரின் பங்களிப்பு தலைமுறைகள் தாண்டி பேசப்படும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.ஓம் சாந்தி" என பதிவிட்டுள்ளார்.