ஊழலுக்கு எதிராக போராடும் அனைவரும் நாட்டின் பாதுகாவலர்களே என பேசியிருந்தார், பிரதமர் நரேந்திர மோடி. இதனையடுத்து பிரதமர் தனது அங்கீகரிக்கப்பட்ட ட்விட்டர் கணக்கின் பெயரை ’சவுக்கிதார் நரேந்திர மோடி’ என மாற்றியுள்ளார். ’சவுக்கிதார்’ என்றால் பாதுகாவலன் என்று பொருள் கொள்ளலாம்.
பிரதமர் நரேந்திர மோடியை பின்பற்றி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் ட்விட்டரில் தங்களது பெயருக்கு முன்பு ’சவுக்கிதார்’ என்று இணைத்துக்கொண்டனர். அதே போல ட்விட்டரில் #chowkidar என்ற ஹாஷ்டேக் இந்தியளவில் முதலிடம் பிடித்துள்ளது.
சவுக்கிதாரின் அர்த்தம் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் அறிய வாய்ப்பில்லை. ஒரு வேளை இதன் காரணமாகக் கூட இன்னும் தமிழக பாஜக தலைவர்களான மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா உள்ளிட்டோர் தங்களது பெயருக்கு முன்பு சவுக்கிதாரை இணைக்கவில்லை. சவுக்கிதாருக்கு காவலாளி, பாதுகாவலன் என்ற அர்த்தங்கள் இருக்கிறது.
நாடாளுமன்றம் தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் 7 கட்டங்களாக நடைபெறவுள்ள சூழ்நிலையில் "சவுக்கிதார்" மூலம் தனது தேர்தல் பரப்புரை யை சமூக வலைத்தளங்களில் பாஜக தொடங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.