ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி ‘மனதில் இருந்து ஒரு குரல்’ என்ற வானொலி நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்துவார். வரும் வாரம் வெளிநாட்டு சுற்றுலா பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருப்பதால் இந்த வாரமே இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது.
இதில் ‘பிபர் ஜாய்’ புயல் குறித்தும், குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் அந்த புயல் ஏற்படுத்திய சேதம் குறித்தும் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வளர்ந்து வரும் மிக முக்கியமான மாவட்டங்களில் ஒன்றான கட்ச் மாவட்டம், இந்த புயலின் பாதிப்பில் இருந்து விரைவில் மீளும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அதுமட்டுமில்லாமல் பேரிடர் மேலாண்மையில் இந்தியாவுடைய பணிகள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்தியாவுடைய மிகப்பெரிய பலமே கடுமையான தருணங்களில் அனைவரும் ஒன்றாக இணைந்து, அதனை சமாளிப்பது தான் என்று கூறிய பிரதமர் மோடி, தற்பொழுது பல்வேறு இடங்களில் மழை பெய்து வரக்கூடிய நிலையில், ஒவ்வொரு துளி நீரையும் சேமிக்க மக்கள் உறுதி எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய பிரதமர், இந்தியாவில் விளையாட்டு துறை மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாகவும், சமீபத்தில் நடைபெற்ற ஆசிய போட்டிகள் துப்பாக்கி சுடுதல் போட்டிகள் உள்ளிட்டவற்றில் பதக்கங்களை வென்ற வீரர்களை குறிப்பிட்டு பேசினார்.
தொடர்ந்து, இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ள சர்வதேச யோகா தினத்திற்கு ‘ஒரு உலகம் ஒரு குடும்பம்’ என்ற கருப்பொருளை கொண்டிருப்பதாகவும், யோகா நாம் அனைவரையும் ஒன்றிணைப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டு பேசினார்.
இந்தியா, ஜனநாயகத்தின் தாய் என்றும், ஆனால் ஜூன் 25 ஆம் தேதி நாம் யாரும் மறந்துவிடக்கூடாது என்றும், ஏனென்றால் ஜனநாயகத்திற்கு எதிர்மறையான அவசரநிலை பிரகடனம் (Emergency) ஜூன் மாதம் 25ஆம் தேதி தான் அமல்படுத்தப்பட்டது என்றும், இந்திய வரலாற்றில் அது ஒரு கருப்பு காலம் எனவும் பிரதமர் மோடி பேசினார்.
”நிர்வாகம் என்று வந்தால் தான் சத்ரபதி சிவாஜியை நினைவில் கொள்வேன். அவரிடம் ஏராளமான நிர்வாக திறன்களை கற்றுக் கொள்ள முடியும். குறிப்பாக நீர் மேலாண்மை மற்றும் கடற்படை ஆகியவற்றில், அவருடைய பணியினை இந்திய வரலாற்றில் இன்று வரை கொண்டாடப்படுகின்றது. பல நூறு வருடங்களுக்கு முன்பாக அவர் கட்டிய கடல் கோட்டைகள் இன்று வரை கம்பீரமாக நிற்கிறது” என்றார்.
2025 ஆம் ஆண்டிற்குள் முழுமையாக காச நோயை ஒழிப்பதற்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது என பேசிய அவர், இதில் பொது மக்களின் பங்களிப்பு மிகப்பெரியது என்றும் பாராட்டினார். கோடை காலம் விடுமுறை முடிந்து பள்ளிகள் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், கடைசி நாள் வரை வீட்டு பாடங்களை மாணவர்கள் முடிக்காமல் வைத்திருக்க வேண்டாம் என்றும், முன்னதாகவே வீட்டு பாடங்களை முடித்து விடுமாறும் அறிவுரை வழங்கினார்.