கொரோனா வைரஸ் எதிரொலியால் பிரதமர் நரேந்திர மோடியின் ஐரோப்பிய யூனியன் சுற்றுப்பயண அட்டவணை மாற்றப்பட்டிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெல்ஜியத்தின் புருசல்ஸ் நகரில் நடைபெறும் இந்தியா - ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கிடையேயான உச்ச மாநாட்டில் மோடி பங்கேற்பதாக இருந்ததது. ஆனால் இந்தியாவிலும் பெல்ஜியத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் இந்த சூழலில் மாநாட்டை வேறு தேதிக்கு நடத்த இரு நாடுகளின் தரப்பில் பரஸ்பர முடிவு எட்டப்பட்டிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியால் விமானத்துறையில் எட்டு லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. வழக்கமாக கிடைக்கும் வருவாயை விட 19 சதவிகிதம் குறைவாகவே கிடைத்திருப்பதாக சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் விளக்கம் அளித்துள்ளார்.