உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மதிப்பிழக்கச் செய்திருக்க வேண்டும். அவர் செய்யத் தவறியதால் பல ஆண்டுகள் கழித்து அதை இப்போதைய அரசு செய்ய நேரிட்டது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர், "எதிர்க்கட்சியினரின் போராட்டத்தால் கருப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகள் நிறுத்தப்படாது. உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மதிப்பிழக்கச் செய்திருக்க வேண்டும். அவர் செய்யத் தவறியதால் பல ஆண்டுகள் கழித்து அதை இப்போதைய அரசு செய்ய நேரிட்டது. தனது உருவ பொம்மை எரிக்கப்படுவதால் பயப்படவில்லை. ஊழலுக்கு
எதிரான தனது யுத்தம் தொடரும்" என்று பிரதமர் தெரிவித்தார்.
68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் ஜனவரி 7, 2018-ல் முடிவுக்கு வரும் நிலையில், நவம்பர் மாதம் 9-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல்கள் ஒரே கட்டமாக நடைபெறு உள்ளது. அதனால் மாநிலத்தில் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ளது.