''பிரதமர் மோடியின் சகோதரர்'' என்ற வாசகத்துடன் ஒரு ஆட்டோ ஓட்டுநரின் புகைப்படம் 3 ஆண்டுகளுக்கு மேலாக சமூக வலைத்தளங்களில் சுற்றிச்சுற்றி வருகிறது.
''அண்ணன், இந்திய நாட்டின் பிரதமர். அவரது தம்பி, ஆட்டோ ஓட்டுநர். பிரதமருக்கு பாராட்டுக்கள்'' என்ற வாசகத்தோடு சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடியின் சகோதரர் எனக்கூறப்படும் ஆட்டோ ஓட்டுநரின் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. இது இன்று, நேற்று அல்ல. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே புகைப்படம் சீசனுக்கு ஏற்ப வைரலாகி வருகிறது.
2014ல் மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு இதே ஆட்டோ ஓட்டுநரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியது. ''ஒரு நாட்டின் பிரதமரின் சகோதரர் சாதாரண ஆட்டோ ஓட்டுநர்’’ என்ற பதிவுகளுடன் பாஜக தொண்டர்கள் பலரும் அந்தப் புகைப்படத்தை பகிர்ந்து பிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கு பாராட்டு தெரிவித்து வந்தனர்.
உண்மையிலேயே இவர் மோடியின் சகோதரரா என்பதை தெரிந்து கொள்ள களத்தில் இறங்கிய டெக்கான் அப்ராட் என்ற ஊடகம், அந்த ஆட்டோ ஓட்டுநர் குறித்த தகவல்களை திரட்டி உண்மையை இப்போது வெளியிட்டுள்ளது.
அதில் பிரதமர் மோடியைப் போல தோற்றமுடைய ஆட்டோ ஓட்டுநர் ஷேக் அயூப். இவர் தெலங்கானாவின் அதிலாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர். முன்பு பேருந்து ஓட்டுநராக இருந்த ஷேக், தற்போது ஆட்டோ ஓட்டுநராக உள்ளார் என்று தெரிவித்தது. சிறிது இடைவெளி விட்ட அந்தப் புகைப்படம், பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது மறுபடியும் பரவ தொடங்கியுள்ளது.
சோம்ஃபை மோடி, அம்ருத் மோடி, ப்ரகலாத் மோடி ஆகிய 3 பேரே பிரதமர் மோடியுடன் உடன்பிறந்த சகோதரர்கள் . இந்தியா டுடே நாளிதழ் வெளியிட்ட தகவலின்படி சோம்ஃபை மோடி முதியோர்களுக்கான இல்லத்தை நடத்தி வருகிறார். அம்ருத் மோடி, தனியார் நிறுவனத்தில் தொழிலாளராக பணியாற்றி வருகிறார். ப்ரகலாத் மோடி காற்றாடி போன்ற பொருள்களை விற்கும் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
தற்போது பரவி வரும் ஆட்டோ ஓட்டுநர் மோடியின் சகோதரர் இல்லை என்றும், அவர் மோடியைப் போல ஒருவர் என்றும் சமூக வலைத்தளங்களில் பலர் விளக்கம் கொடுத்தும் வருகின்றனர்