"இஸ்லாமியர் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது; மத்திய அரசின் அறிக்கை முரணானது” - வெளியான புதிய அறிக்கை!

நாட்டில் இந்துக்கள் மக்கள்தொகை சரிந்து, இஸ்லாமியர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாக பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், அனைத்து மதத்தினரின் பிறப்பு விகிதமும் குறைந்துவருவதாக தன்னார்வ அமைப்பொன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
மக்கள்தொகை
மக்கள்தொகைpt web
Published on

முன்னுக்குப்பின் முரணாக சில அறிக்கைகள் அமைந்துவிடுகின்றன. நாட்டில் இந்துக்கள் மக்கள்தொகை சரிந்து, இஸ்லாமியர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாக பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், அனைத்து மதத்தினரின் பிறப்பு விகிதமும் குறைந்துவருவதாக தன்னார்வ அமைப்பொன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

Population Foundation of India என்ற தன்னார்வ அமைப்பு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் இஸ்லாமியர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாக பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு வெளியிட்ட அறிக்கை தவறான தகவல்களின் அடிப்படையில் அமைந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இஸ்லாமியர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.

1981-1991 வரை 32.9 % ஆக இருந்த இஸ்லாமியர் கருவுறுதல் விகிதம் (Fertility Rate), 2001-2011 காலகட்டத்தில் 24.6% ஆக குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேகாலகட்டத்தில் இந்துக்களின் கருவுறுதல் விகிதம் 22.7 % இருந்து 16.8% ஆக குறைந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.

அனைத்து மதத்தினரின் கருவுறுதல் விகிதமும் கணிசமான அளவு குறைந்துவருவதை காணமுடிவதாக இந்த அறிக்கை கூறுகிறது. இஸ்லாமியர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாக பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு கூறும் அறிக்கை தவறான புரிதலை ஏற்படுத்தும் என்கிறார் தன்னார்வ அமைப்பின் செயல் இயக்குநர் பூனம் முட்ரெஜா.

கருவுறுதல்
கருவுறுதல்

கருவுறுதல் விகிதம் கல்வி மற்றும் வருவாய் அளவை பொறுத்தது, மதத்தை பொறுத்ததல்ல என்கிறார் பூனம். கல்வி, சுகாதாரம், சமூக-பொருளாதார வளர்ச்சி நன்றாக உள்ள கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் அனைத்து மதத்தினர் மத்தியிலும் குறைவாக உள்ளதாக பூனம் தெரிவிக்கிறார். உதாரணமாக கேரளாவில் உள்ள இஸ்லாமிய பெண்களின் கருவுறுதல் விகிதம், பீகாரில் உள்ள இந்து பெண்களின் கருவுறுதல் விகிதத்தை விட குறைவு என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

பங்களாதேஷ், இந்தோனேசியா போன்ற இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளிலும் குடும்பக்கட்டுப்பாடு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதால் இந்தியாவை காட்டிலும் பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதாக Population Foundation of India தெரிவிக்கிறது. அச்சத்தையும், பிரிவையும் உண்டாக்கும் மக்கள்தொகை ஆய்வுகளை ஊடகங்கள் பயன்படுத்தக்கூடாது என்றும் Population Foundation of India அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. உள்ளார்ந்த வளர்ச்சி, பாலின சமத்துவத்தை உறுதி செய்யும் வகையிலும், ஒற்றுமையான சமூக கட்டமைப்பை உருவாக்குவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் Population Foundation of India அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com