தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமர் நிவாரணத் தகவல்களை வெளியிடப் பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரக்கால நிவாரணம் என்ற பெயரில் இந்திய மக்களிடம் இருந்து பொது நிவாரணம் கோரப்படுவது நடைமுறையில் உள்ளது. அண்மையில் கொரோனா மீட்புப் பணிகளுக்காகக் கூட பொதுமக்களிடம் மத்திய அரசு சார்பில் பிரதமர் நிவாரணத்திற்குப் பணம் அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இவ்வாறாகப் பிரதமர் நிவாரணத்தில் பெறப்பட்ட தொகை மற்றும் அதுதொடர்பான தகவல்களை அளிக்கும்படி, பெங்களூரில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சட்ட மேற்படிப்பு மாணவியான ஹர்ஷா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்திருந்தார்.
ஆனால் மாணவி கேட்ட தகவல்களைப் பிரதமர் அலுவலகம் தருவதற்கு மறுத்துவிட்டது. பிரதமர் நிவாரணம் ‘பொதுமக்களுக்கான அதிகாரம்’ அல்ல எனவும் பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் நிவாரணம் தொடர்பான தகவல்கள், அதற்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.