இந்திய தூதரக வலைதளங்களில் பிஎம் கேர்ஸ் (PM CARES) சலுகை அறிவிப்புகளுடன் விளம்பரப்படுத்தப்பட்டு நிலையில், இன்னும் இந்த நிதியம் குறித்து தணிக்கை விவரம் அதிகாரபூர்வமாக தகவல் வெளியிடாதது சர்ச்சைக்கு வலுசேர்த்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலை எதிர்கொள்ள 'பிஎம் கேர்ஸ்' நிதியம் உருவாக்கப்பட்டு பொதுமக்கள், நிறுவனங்களிடம் நன்கொடை பெறப்பட்டு வருகிறது. 'பிஎம் கேர்ஸ்' நிதியம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே சர்ச்சைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. நிதியம் தொடங்கப்பட்ட 5 நாட்களில் ரூ.3,076 கோடி நன்கொடையாக பெறப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த அமைப்பே இந்தத் தகவலை வெளியிட்டது.
ஆனால், யார் யார் எவ்வளவு நன்கொடை கொடுத்தார்கள் என்று தகவலை மட்டும் வெளியிடவில்லை. ஆர்.டி.ஐ மூலம் கேட்டும், காங்கிரஸ் தலைவர்கள் நேரடியாக கேள்வி எழுப்பியும் தணிக்கை தகவல்கள் வெளியாகவில்லை. இதனால் பிஎம் கேர்ஸ் தொடர்பாக தொடர்ந்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில், மே மாதத்தில் 'மேட் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் வென்டிலேட்டர் தயாரிக்கும் பணிக்கு 3,000 கோடி ரூபாய் பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்திய மக்கள் மட்டுமின்றி 27 நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களிலும் PM CARES-ஐ விளம்பரப்படுத்த மத்திய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இந்தப் பட்டியலில் இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, ஜப்பான், கொரியா, ஜெர்மனி, பிரான்ஸ், சுவீடன் மற்றும் பாகிஸ்தான் போன்ற பல முக்கிய நாடுகளில் உள்ள தூதரகங்கள் உள்ளன.
இந்த ஆலோசனையை பின்பற்றி, 27 தூதரகங்களும் தங்கள் வலைதளங்கள் மற்றும் சமூக ஊடக தளங்களில் PM CARES FUND-ஐ விளம்பரப்படுத்தியதாக ஆர்டிஐ மூலம் தகவல் வெளியாகியுள்ளது என்று 'தி குயின்ட்' செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தி தொகுப்பில், ''கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் அளித்த ஆர்டிஐ பதிலில், 'வலைதளம் மூலமாகவும் தூதரகத்தில் பதிவுசெய்யப்பட்ட சமூக நிறுவனங்கள் மூலமாகவும் PM CARES விளம்பரப்படுத்தப்பட்டது.
அதன்படி, கத்தாரை தளமாகக் கொண்ட 2 நிறுவனங்களும் 22 தூதரக ஊழியர்களும் PM CARES FUND-க்கு நன்கொடை அளித்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், நன்கொடை அளித்த தொகையை கத்தார் இந்திய தூதரகம் பகிர்ந்து கொள்ளவில்லை. ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம், ஜப்பானில் பட்டியலிடப்பட்ட 45 இந்திய சங்கங்களுடன் PM CARES பற்றிய தகவல்களை பரப்பியதாகவும், அதன் வலைதளத்தில் PM CARES-ஐ விளம்பரப்படுத்தியதாகவும் தெரியவருகிறது.
அதன்படி, ஜப்பானிய நிறுவனம் நிஸ்ஸீ ஏஎஸ்பி மெஷின் கோ லிமிடெட். இதே, நிஸ்ஸீ ஏஎஸ்பிக்கு மகாராஷ்டிராவிலும் ஒரு கிளை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, இந்த நிறுவனம் PM CARES க்கு நன்கொடை வழங்க ஆர்வமாக இருந்துள்ளது. இதுதொடர்பாக, நிஸ்ஸீ ஏஎஸ்பியின் பொது மேலாளர் இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில், ''இந்தியாவில் கோவிட் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு ஆதரவளிக்க விரும்புகிறோம், உணவு மற்றும் நீர் போன்ற தினசரி பொருட்களை வழங்க விரும்புகிறோம்" என்று குறிப்பிட்டு இருந்தனர்.
இதே கடிதத்தில் ''மகாராஷ்டிராவில் உற்பத்தி நடவடிக்கைகளை மறுதொடக்கம் செய்ய எங்கள் இந்திய தொழிற்சாலை நேற்று ஒப்புதல் பெற்றுள்ளது. இந்த விஷயத்தில் உங்கள் ஆதரவையும் முயற்சிகளையும் நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதுதான் சர்ச்சையை கிளப்புகிறது. PM CARES-க்கு பங்களிப்புக்கும், நிஸ்ஸீ ஏஎஸ்பி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட சலுகைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்தது.
இதுதொடர்பாக நிஸ்ஸீ ஏஎஸ்பி நிறுவனத்தின் பொது மேலாளருக்கு கடிதம் எழுதியது 'தி குயின்ட்' செய்தி நிறுவனம். இதற்கு வந்த பதில், ''இந்த தொற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களுக்கும் அவதிப்படுபவர்களுக்கும் நிவாரணம் வழங்குவதற்காக நாங்கள் PM CARES மூலம் இந்திய அரசுக்கு இந்த நன்கொடை அளித்தோம். வேறு எதுவும் இதில் சொல்வதற்கு இல்லை" என்று அதில் கூறப்பட்டது.
இந்த நாடுகள் மட்டுமில்லை, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் PM CARES விளம்பரப்படுத்தப்பட்டு நன்கொடைகள் பெறப்பட்டு வருகின்றன. பாகிஸ்தானில் விளம்பரப்படுத்தப்பட்டாலும், அங்கே இருந்து நிதி கிடைக்கவில்லை. ஆனால், சீனாவில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட WeChat, Weibo போன்ற ஆப்கள் மூலமாக விளம்பரப்படுத்தப்பட்டு நன்கொடைகள் பெறப்பட்டு வருகின்றன. ஆனால், பெறப்படும் நன்கொடைகள் எவ்வளவு, யார் யார் கொடுத்தார்கள் என்ற விவரங்கள் துளியும் வெளியாகவில்லை.
நாட்டில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் தங்களுக்கு கிடைக்கும் நன்கொடை, குறிப்பிட்ட தொகைக்கு மேல் நிதி வழங்கிய நன்கொடையாளர்களின் பெயர் விவரங்கள் உள்ளிட்டவற்றை வெளியிட வேண்டும் என்பது மத்திய அரசின் விதி. அப்படி இருக்கையில், PM CARES நிதியத்துக்கு மட்டும் இதுபோன்ற விதிகளை பின்பற்றுவதில்லை. PM CARES நிதியம் தொடங்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானதும் செலிபிரிட்டிகள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் நன்கொடைகளை வழங்கினர்.
இவர்கள் கொடுத்த மொத்த தொகையின் விவரங்களை மட்டும் வெளியிடப்படும் நிலையில், நிதி கொடுத்தவர்கள் யார், எவ்வளவு நன்கொடை கொடுத்தார்கள் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. நாடாளுமன்றத்தில் பேசப்பட்டும் இதுதொடர்பான தணிக்கை தகவல் மட்டும் வெளியிடாத மர்மம் என்னவென்பது புரியாத புதிராக உள்ளது.
- தகவல் உறுதுணை: The Quint