திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கவேண்டிய கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.க வழக்கறிஞர் அஸ்வினி உபாத்தியா பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தேசிய கீதம் இசைப்பதை கட்டாயமாக்கி 2015-ம் ஆண்டு உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் பலர் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளது. அதில், தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்கிற உத்தரவை மாற்ற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் பேசிய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், “தேசிய கீதத்தை இசைப்பது தொடர்பான வழிமுறைகளை உருவாக்க 12 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தக் குழு வழிமுறைகளை உருவாக்க 6 மாதங்களாகும். அதுவரை தேசிய கீதம் இசைப்பது கட்டாயம் என்பதை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
தேசிய கீதம் தொடர்பான பொதுநலன் வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, 'தேசிய கீதம் இசைக்கப்படும்போது அதற்கு உரிய மரியாதை கொடுக்கவேண்டும். அதனால், திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கவேண்டிய கட்டாயமில்லை' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மத்திய அரசால் அமைக்கப்பட்ட 12 பேர் கொண்ட அமைச்சரவைக் குழு திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவது குறித்து இறுதி முடிவை எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.