கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பிளாஸ்மா சிகிச்சையை கைவிடுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் தீவிரமடையத் தொடங்கிய காலத்தில் பிளாஸ்மா சிகிச்சை முறை அதிகளவில் பரிந்துரைக்கப்பட்டது. அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் ரத்தத்தில் உள்ள எதிரணுக்களை பிரித்தெடுத்து புதிதாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் செலுத்தி கொரோனா வைரஸுக்கு எதிராக போராட வைக்கும் மருத்துவமுறையே பிளாஸ்மா சிகிச்சை. இளைஞர்கள், பெரியவர்கள் என பலரும் முன் வந்து பிளாஸ்மாக்களை வழங்கி வந்தனர்.
இந்நிலையில் கொரோனா தொற்று பரவத் தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட சுழலில் பிளாஸ்மா சிகிச்சை முறை பயனுள்ளதாக உள்ளதா? என்பது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நிபுணர் குழு ஆய்வு செய்து வந்தது. ஆய்வின் முடிவில் கொரோனா பாதிக்கப்பட்டோரை பூரண குணமடைய வைப்பதற்கு பிளாஸ்மா சிகிச்சை முறையால் எந்த பலனும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
இறப்பு விகிதத்தையும் பிளாஸ்மா சிகிச்சை முறை குறைக்கவில்லை என்பதால் இச்சிகிச்சை முறையை கைவிடுவது குறித்து விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என இரு தினங்களுக்கு முன்னர் ICMR கூறியிருந்தது. இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கும் முறையை கைவிடுவதாக இந்திய மருத்துவ கவுன்சில் தனது இறுதி முடிவை தெரிவித்துள்ளது.