ஒடிசாவைச் சேர்ந்த எம்பி ஒருவர் தனது அடுத்த ஐந்து ஆண்டு ஊதியத்தை ஃபோனி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
ஃபோனி புயல் ருத்ரதாண்டவம் ஆடி ஒடிசாவை புரட்டி போட்டது. புயலின் கோரதாண்டவத்தால் ஒடிசாவே உருமாறியது. மணிக்கு சுமார் 240 கிலோமீட்டர் வேகத்தில் அதிதீவிர புயலாக கரையைக் கடந்த ஃபோனி, பலத்த சேதங்களை விளைவித்து ஆறாத ரணச்சுவடுகளை பதித்துவிட்டு சென்றது.
புயலால் பத்தாயிரம் கிராமங்களும், 52 நகரங்களும் கடுமையாக சேதமடைந்தன. ஃபோனி புயல் சுமார் ரூ.525 கோடி மதிப்பிலான சொத்துகளை சேதப்படுத்தியதாக அம்மாநில அரசு தெரிவித்தது. இந்தப் புயலால், ஒடிசாவில் சுமார் ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டனர். அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகளின் உதவியால் ஒடிசா மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.
இதற்கிடையே மக்களவைத் தேர்தலும் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் புரி தொகுதியில் பிஜு ஜனதாதள சார்பில் போட்டியிட்ட பினாகி மிஷ்ரா வெற்றி பெற்றார். தனது வெற்றிக்குப் பின்னர் புதிய அறிவிப்பு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
அதில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் எம்பியாக தாம் பெரும் ஊதியம் அனைத்தையும் ஃபோனிப் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக முதலமைச்சர் நிவாரண நிதியில் செலுத்துவதாக அறிவித்துள்ளார். இதே போல் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தனது ஓராண்டு ஊதியத்தை வழங்குவதாக கூறியுள்ளார்.