ஜம்மு-கஷ்மீரில் உள்ள வைஷ்ணவோ தேவி கோயில் வரும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் மலைப்பகுதியில் உள்ளது வைஷ்ணவோ தேவி கோயில். இந்த கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு விபத்து, நிலச்சரிவு மற்றும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால், அவர்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. அத்துடன் ஆயுள் காப்பீடும் வழங்கப்படுகிறது. அதன்படி, 5 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ. 3 லட்சமும், 5 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.1 லட்சமும் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தக் காப்பீட்டுத் தொகையை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளதாக கோவில் நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் உடல்நலக்குறைவு மற்றும் விபத்துகளுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
தற்போது ஜம்மு-காஷ்மீரின் ஆளுநராக உள்ள சத்யா பால் மாலிக் தான், வைஷ்ணவோ தேவி கோயில் நிர்வாகத்தின் தலைவராகவும் உள்ளார். இவர் தலைமையில் அண்மையில் நடந்த 63வது கோயில் நிர்வாக ஆலோசனைக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் காப்பீடு தவிர, குழுவாக வருவோருக்கு ஏற்படும் விபத்துகளுக்கும் காப்பீடு வழங்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பயணத்தின் போது பவன் முதல் பாய்ரோன் காதி வரை ரோப்வே மூலம் கூடுதலாக ரூ.5 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
யாத்திரிகளின் பயணத்தின் போது விபத்துகள், உடல்நலக்குறைவு, மண்சரிவு ஏற்பட்டால், அவர்களுக்கு உடனே சிகிச்சை அளிக்க உயர்தர மருத்துவ வசதியுடன் கூடிய மருத்துவமனைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கோயில் நிர்வாக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். கோயிலுக்கு வரும் பக்தர்கள் செல்லும் பாதையில் 8 மருத்துவக்குழுக்கள் தயாராக இருப்பதாகவும், மேலும் ரூ.1 கோடியில் புதிய மருத்துவக்குழு அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.