பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து யாத்ரீகர்கள் பலரும் கேதார்நாத் குகையில் தியானம் செய்ய தொடங்கியுள்ளனர்.
கடந்த மே 18ஆம் தேதி பிரதமர் மோடி கேதார்நாத்தில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, மலைப்பகுதியில் அமைந்துள்ள குகையில் இரவு முழுக்க தியானம் செய்தார். அதைத் தொடர்ந்து பலரும் அந்தக் குகையில் தியானம் செய்ய விரும்புவதாகவும், அதற்காக ஆயிரத்து 500 ரூபாயை கட்டணமாகச் செலுத்தி முன்பதிவு செய்வது அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அந்தக் குகையில் தியானம் செய்ய 10 நாட்களுக்கு முன்பாகவே ஆன்லைனில் முன்பதிவு தீர்ந்து விடுவதாகத் தெரிவிக்கும் அதிகாரிகள், தேவை அதிகரிப்பால் இரண்டாவது குகையை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறுகின்றனர். கேதார்நாத் குகையில் தியானம் செய்ய முன்பதிவு செய்த யாத்ரீகர்கள், இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே குப்தகாசியில் தங்கி, மருத்துவப் பரிசோதனை செய்த பிறகே கேதார்நாத்திற்கு அனுமதிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.