தேர்தல் விதிமுறைகளின்படி மத்திய அரசு இணையதளங்களிலிருந்து பிரதமர் மோடியின் புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளன. பிரதமர் அலுவலக இணையதளத்திலும் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களின் புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால், தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களின் புகைப்படத்தை இணையதளத்திலோ அல்லது அரசு திட்டங்களிலோ பயன்படுத்தக் கூடாது எனத் தேர்தல் விதிமுறை இருக்கிறது.
இதன் அடிப்படையில் மத்திய அரசு இணையதளங்களிலிருந்து பிரதமர் மோடியின் புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளன. அமைச்சர்கள் படங்களும் அகற்றப்பட்டுள்ளன. மத்திய அரசு அலுவலகங்களில் பிரதமர், அமைச்சர்களின் படங்கள் மறைக்கப்பட்டும் அகற்றப்பட்டும் வருகின்றன. ரயில்நிலையம், பேருந்து நிலையம், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் புகைப்படங்களை மூன்று நாட்களில் நீக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.