ஆறாம் வகுப்பு அறிவியல் பாட புத்தகத்தில் ஒலி மாசு ஏற்படுத்தும் பட்டியலில் மசூதி படம் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐசிஎஸ்இ இந்திய சான்றிதழ் இடைநிலை கல்வி வாரியத்தின் ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில், ஒலி மாசு ஏற்படுத்துபவை பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஒலி மாசுபாடு குறித்த புகைபடங்களும் தொகுக்கப்பட்டிருந்து. இதில், ரயில், கார், விமானம் உள்ளிட்டவைகளுடன், மசூதி படமும் இடம்பெற்றுள்ளது. முன்புறத்தில் ஒரு மனிதன் தனது காதுகளைக் மூடி கொண்டு நிற்பது போன்ற காட்சிகளும் அந்த படங்களில் இருந்தது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புத்தகத்தை வெளியிட்ட பதிப்பக உரிமையாளர் ஹேமந்த் குப்தா கூறுகையில், ஒலி மாசு ஏற்படுத்தும் பட்டியலில் இடம் பெற்ற அந்த படம் உடனடியாக நீக்கப்படும். இது யாருடைய உணர்வுகளையாவது காயப்படுத்தி இருந்தால் நாங்கள் மன்னிப்புக் கேட்கிறோம். அடுத்த பதிப்பிலிருந்து இந்த புகைப்படம் நீக்கப்படும் எனக் கூறினார்.
கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி பாடகரான சோனு நிகாம் ‘ஆஸான் (இஸ்லாமியர்கள் சத்தமாக ஓதும் ஜெபம்) நிச்சயமாக இஸ்லாமின் முக்கியப்பகுதி தான். ஆனால், அவை ஒலிபெருக்கிகளினால் பரப்பப்பட வேண்டியதில்லை’ என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதேபோல், கடந்த மாதம் குஜராத் மாநிலத்தின் 9 ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் இயேசு கிறிஸ்து கொடியவர் என்ற அர்த்தமுடைய வார்த்தை பதிவிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது. இதுபோன்ற செயல்கள் மாணவர்களிடம் மதவாத கருத்துகளை தூண்டுவதாக உள்ளது என பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.