கவுகாத்தியில் உள்ள திரையரங்கம் ஒன்றில் தேசிய கீதம் இசைத்தபோது, எழுந்து நிற்க இயலாத மாற்றுத்திறனாளியை சிலர் ‘பாகிஸ்தானி’ எனக் கூறி மனதை புண்படுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன், தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது. அப்போது அனைவரும் எழுந்து நின்றபோது, அர்மான் அலி என்ற மாற்றுத்திறனாளி எழுந்து நிற்க இயலாத காரணத்தால் அமர்ந்து கொண்டே தேசிய கீதத்தை பாடியுள்ளார். இதைக்கண்ட சிலர் அவரை பாகிஸ்தானி என்று கூறி, மனதை புண்படும் படி பேசியுள்ளனர். இந்நிலையில் மனமுடைந்த அலி, இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறும் என உச்சநீதிமன்றம் சிந்தித்திருக்காது என நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தான் எழுதி அனுப்பவுள்ளதாகவும், தன்னை போன்றவர்களின் நிலை குறித்து அறிய வேண்டும் என்றும் கூறியுள்ளார். திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்கத் தேவையில்லை என்று கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.