கர்நாடகா| தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு மசோதா|PhonePe இணை நிறுவனரும் எதிர்ப்பு!

கர்நாடகாவில் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக PhonePe தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான சமீர் நிகாமும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீர் நிகாம்
சமீர் நிகாம்எக்ஸ் தளம்
Published on

தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை காங்கிரஸ் அரசு இயற்றியுள்ளது. அதில், ’கர்நாடகாவில் உள்ள அனைத்துத் தனியார் நிறுவனங்களிலும் நிர்வாகப் பணிகளில் 50 சதவீதமும், நிர்வாகம் சாராத பணிகளில் 75 சதவீதமும் கன்னடர்களை பணியமர்த்த வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவின்படி, கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர், 15 ஆண்டுகள் மாநிலத்தில் வசிப்பவர்கள், கன்னடத்தை தெளிவாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் தெரிந்தவர்கள் இடஒதுக்கீடு பெற தகுதியானவர்கள். தகுதியான அல்லது பொருத்தமான உள்ளூர் நபர்கள் கிடைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அரசுடன் இணைந்து உள்ளூர் நபர்களுக்கு 3 ஆண்டுகளுக்குள் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் இந்த மசோதா கூறுகிறது. இந்த மசோதா, நடப்பு கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இதற்கு இன்போசிஸ், மணிபால், பயோகான் உள்ளிட்ட பல்வேறு ஐ.டி. நிறுவனங்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தன. இந்த மசோதா பாரபட்சமானது என்றும், அரசியல் சாசனத்தை மீறிய செயல் என்றும் கண்டனங்கள் வலுத்தன. குறிப்பாக, நாஸ்காம் (nasscom) எனப்படும் தேசிய ஐடி நிறுவனங்களுக்கான சங்கம், ஏற்கெனவே எட்டப்பட்ட வளர்ச்சி தடம்புரளாமல் தடுக்க ஐடி நிறுவனங்களுடன் அரசு ஆலோசனை நடத்த வேண்டும் என வலியுறுத்தியது. இவ்வாறான கட்டுப்பாடுகள் ஐடி நிறுவனங்களை வேறு மாநிலங்களை நோக்கி நகரச் செய்துவிடும் என்றும் நாஸ்காம் எச்சரித்தது. மேலும், இந்த இட ஒதுக்கீடு மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக அமையும் என பிரபல தொழிலதிபர்கள் கிரண் மஜூம்தார், மோகன் தாஸ் பை ஆகியோரும் தெரிவித்திருந்தனர்.

இதையும் படிக்க: விவாகரத்து பற்றிய இன்ஸ்டா பதிவு.. லைக் செய்த அபிஷேக் பச்சன்.. வதந்திகளுக்கு மறைமுக பதில்?

சமீர் நிகாம்
தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு மசோதா|கிளம்பிய எதிர்ப்பு.. பின்வாங்கிய சித்தராமையா!

இப்படி, இந்த மசோதாவுக்கு தொடர்ந்து எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த மசோதாவை நிறுத்திவைப்பதாக முதல்வர் சித்தராமையா அறிவித்தார். அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த மசோதா குறித்து விவாதித்து முடிவெடுப்போம் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இம்மசோதாவுக்கு எதிராக PhonePe தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான சமீர் நிகாமும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ’எனது நிறுவனங்கள் மூலம் இந்தியா முழுவதும் 25,000க்கும் மேற்பட்ட வேலைகள் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், பெற்றோரின் வேலை காரணமாக பல மாநிலங்களில் வாழ்ந்த என்னைப் போன்றவர்களுக்கு இந்த மசோதா நியாயமற்றது’ எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “எனக்கு 46 வயதாகிறது. 15+ வருடங்கள் ஒரு மாநிலத்தில் வாழ்ந்ததில்லை. என் தந்தை இந்திய கடற்படையில் பணிபுரிந்தார். நாடு முழுவதும் பணியமர்த்தப்பட்டார். நாடு முழுவதும் வேலைவாய்ப்புகளை உருவாக்கினாலும், கர்நாடகாவில் வளர்ந்த தனது குழந்தைகள், ’எங்கள் சொந்த ஊரில் வேலைக்குத் தகுதியற்றவர்களா’ ”என அதில் கேள்வி எழுப்பியிருப்பதுடன், ”அவமானம்” என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: உத்தரகாண்ட்| கோயிலில் டிரம்ஸ் வாசிக்க மறுப்பு: பட்டியலின குடும்பங்களை ஊரைவிட்டே ஒதுக்கிய கொடூரம்!

சமீர் நிகாம்
'முறையாக கடைபிடிக்கப்படாத இடஒதுக்கீடு' - ஐ.ஐ.எம். நிறுவனங்களில் நிலை!

இதற்கு கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா, கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் மசோதாவை திடீரென நிறுத்தி வைத்து கன்னட மக்களையும், கர்நாடகத்தையும் அவமதித்த முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசின் முடிவை கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த சட்டத்தை அமல்படுத்துவது கடினம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஏற்கெனவே இதுபோன்ற சட்டங்கள் இயற்றப்பட்ட நிலையில், இந்தியர்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com