அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க பயன்படுத்தப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தை கடந்த பிப்ரவரி 15ம் தேதி உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை வெளியிட வேண்டும் எனவும் பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டது. இதில் பல்வேறு நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கியது தெரியவந்தது. ஒரே முறையில் எல்லா தகவல்களையும் மொத்தமாக வெளியிடாமல் ஸ்டேட் வங்கியானது கொஞ்சம் கொஞ்சமாக தகவல்களை வெளியிட்டு வருகிறது. அதனால், தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக நாளொரு செய்திகள் தினமும் வந்தவண்ணம் உள்ளன. எந்த கட்சிக்கு எவ்வளவு நிதி கிடைத்துள்ளன, எந்த நிறுவனங்கள் எவ்வளவு நிதி கொடுத்துள்ளன என்பது தொடர்பாக செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.
இந்நிலையில், மருந்து நிறுவனங்கள் மட்டும் ரூ800 கோடியளவில் தேர்தல் நிதிப்பத்திரங்களை வாங்கியுள்ளது. அதேவேளையில் இதில் பெரும்பாலான pharmaceutical நிறுவனங்கள், தேர்தல் பத்திரங்களை வாங்கிய காலக்கட்டத்தில் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்ற துறைகளின் சோதனைகள் மற்றும் கண்காணிப்புகளின் கீழ் இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது. சில நிறுவனங்கள் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்றவற்றின் சோதனைகள் நிகழ்ந்த சில நாட்களுக்குப் பின் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளன. அதேசமயத்தில், 7 நிறுவனங்கள், தங்களது தரமற்ற மருந்துகளுக்காக விசாரணை வளையத்தில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்களை மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940 (Drugs and Cosmetics Act, 1940) நெறிப்படுத்துகிறது. இச்சட்டத்தின் படி, நிறுவனங்கள் தங்களது உற்பத்திப் பொருட்களின் தர சோதனையில் தோல்வி அடைந்தால், எந்த ஒரு மாநிலத்தின் அரசும் நோட்டீஸ் அனுப்பலாம். ஆனால், நிறுவனத்தின் உற்பத்தியை நிறுத்துதல் அல்லது உரிமத்தை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கை அந்த நிறுவனம் அமைந்துள்ள மாநிலத்தின் அரசால் மட்டுமே எடுக்க முடியும். ஏற்கனவே, மருந்து நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு அதிகளவில் நன்கொடைகளை வழங்கி வருகின்றன என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் சூழலில், தேர்தல் பத்திர விவகாரங்களும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
1. Hetero Labs & Hetero Healthcare நிறுவனம் 2022 ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.39 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. தொடர்ந்து 2023 ஜூலை மாதத்தில் 10 கோடியும், 2023 அக்டோபர் மாதத்தில் 11 கோடியும் என மொத்தமாக ரூ.60 கோடிகளுக்கு தேர்தல் நிதிப்பத்திரங்களை வாங்கியுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட இந்த நிறுவனத்திற்கு 10 மாதங்களுக்கு முன், மருந்துகளின் தரத்திற்காக 6 முறை நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. இதில் 3 நோட்டீஸ்கள் அந்நிறுவனத்தின் கோவிட் 19 தொற்றுக்கான மருந்தான remdesivirக்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது.
2. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட MSN Pharmachem Pvt நிறுவனம் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ. 20 கோடி மதிப்பிலான பத்திரங்களைப் பெற்றுள்ளது. ஆனால், அதற்கு ஒரு வருடத்திற்கு முன் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வருமானவரித்துறை, அந்நிறுவனத்தின் கணக்கில் காட்டப்படாத பணத்திற்காக குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
3. Intas Pharmaceuticals Ltd நிறுவனம் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.20 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியது.
4. Lupin நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ரூ.18 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களைப் பெற்றுள்ளது.
5. Mankind நிறுவனம் 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ரூ.24 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.
6. குஜராத்தை தளமாகக் கொண்ட Torrent Pharma 2019 ஆம் ஆண்டு மே மாதம் முதல் ஜனவரி 2024 ஆம் ஆண்டுவரை கிட்டத்தட்ட ரூ.77.5 கோடி ரூபாய்க்கான தேர்தல் நிதிப்பத்திரங்களைப் பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் மருந்துகளின் மீதும் தரம் தொடர்பாக பல்வேறு முறை குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
7. Micro Labs கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வருமானவரித்துறை இந்நிறுவனத்தின் 40 க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டது. 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ரூ.9 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களைப் பெற்றுள்ளது. 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரூ.7 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களைப் பெற்றுள்ளது.
8. Divi’s Labs நிறுவனம் 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 20 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களையும், அக்டோபர் மாதத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களையும் பெற்றுள்ளது. இந்நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதும் முறைக்கேடுகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
9. Zydus Healthcare நிறுவனம் 2022 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டுவரை ரூ.29 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.
10. Glenmark நிறுவனம் ரூ.9.75 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பெற்றுள்ளது.
11. Cipla நிறுவனம் 2019 ஆம் ஆண்டு முதல் ரூ. 39.2 கோடிகள் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களைப் பெற்றுள்ளது.
12. IPCA Laboratories Limited நிறுவனம் நவம்பர் 2022 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 2023 ஆம் ஆண்டுவரை ரூ.13.5 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களைப் பெற்றுள்ளது.
13. Intas Pharmaceutical நிறுவனம் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.20 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களைப் பெற்றுள்ளது.
மேற்கண்ட நிறுவனங்களில் சில நிறுவனங்கள் வருமான வரித்துறை, அமலாக்கத்துறைகளின் சோதனைகளில் இருந்து சில மாதங்கள் கழித்து தேர்தல் பத்திரங்களை வாங்கியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சில நிறுவனங்களின் மருந்துகளின் தரம், அளவுகோல் போன்றவற்றின் கீழ் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஏன் இந்த அச்சம் ஏற்படுகிறது என்றால் மக்களின் உயிர் தொடர்பான விஷயம் என்பதால் இதில் ஏதேனும் சலுகைகள் பணம் பெற்று வழங்கப்பட்டால் அது பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். ஏற்கனவே இந்தியாவின் இருமல், கண் மருந்துகளுக்கு வெளிநாடுகள் தடை விதித்து வரும் சூழலில், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் மக்களுக்கு மருந்துப் பொருட்களின் மீதுள்ள நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கும் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், நேரடியாக குற்றச்சாட்டுக்களை உறுதி செய்ய முடியாது. அப்படி நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் பலரும் இத்தகைய குற்றச்சாட்டுக்களை முன் வைக்கின்றனர்.
உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சமீபத்தில் பேசியிருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு நிறுவனங்களின் சோதனைகளுக்கும் தேர்தல் நிதிப்பத்திரங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அமலாக்கத்துறை ரெய்டு உள்ளிட்ட அழுத்தங்களை கொடுத்ததே, நிறுவனங்கள் ஆளும் கட்சிக்கு நன்கொடை வழங்கியதாக கூறுகிறார்கள். இவை அத்தனையும் அவர்களின் அனுமானங்களே அன்றி உண்மையல்ல;
அரசியல் கட்சிகள் நிதி பெறக்கூடாது என்று சொல்ல முடியாதே. அதற்கான விதிமுறைகள் நிச்சயம் தேவை. முந்தைய சட்டங்களை விட தேர்தல் பத்திரமுறை மேம்பட்டதுதான். தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததில் இருந்து சில பாடங்களை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் தேர்தல் நிதி தொடர்பான சட்டங்கள் உருவாக்கப்படும் போது, கடந்த காலத்தில் கிடைத்த பாடங்களை கொண்டு வெளிப்படைத்தன்மையுடன் புதிய நடைமுறைகளை உருவாக்க முடியும்” என்றார்.