பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குஜராத் அரசு 4% குறைத்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை கடந்த 70 நாட்களில் கணிசமாக உயர்ந்துள்ளது. இதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 குறைத்து மத்திய அரசு அறிவித்தது. மேலும் மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வாட்வரியை குறைக்க வேண்டும் என்றும், அவ்வாறு குறைக்கும் என நம்புவதாகவும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை 4% குறைத்துள்ளதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது. இந்த வரி குறைப்பு மூலம் லிட்டருக்கு பெட்ரோல் விலையானது ரூ.2.93 மற்றும் டீசல் ரூ.2.72-ம் குறைகிறது. அத்துடன் இந்த விலை குறைப்பு இன்று நல்லிரவு முதல் அமலுக்கு வருகிறது. மாநில அரசுகள் பெட்ரோல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்திய பிறகு, முதல் மாநிலமாக பாஜகவின் ஆட்சி நடைபெறும் குஜராத்தில் வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல் ரூ.70.93 மற்றும் டீசல் 60.01 என விற்கப்படும் நிலையில், தமிழக அரசு வாட் வரியை குறைக்குமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.