பிரதமர் மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தொடரப்பட்ட முழுமையான விசாரணை பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குஜராத் கலவரம் தொடர்பாக அப்போது அங்கு ஆட்சியில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி குறித்து பிரபல செய்தி நிறுவனமான பிபிசி ஆவண படத்தை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. பிரதமர் மோடி அந்த சமயத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக மோசமான நடவடிக்கைகள் மேற்கொள்வதாக அந்த ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறி, அந்த ஆவணப்படத்தை பல்வேறு கல்வி நிலையங்களில் ஒளிபரப்ப தன்னிச்சையாக அரசு தடை விதித்து வருகிறது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை, `பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையை மீறும் வகையில் உள்ளது’ எனக்கூறி மத்திய அரசின் தடை உத்தரவை நீக்ககோரி வழக்கறிஞர் எம்.எல் சர்மா உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விரைந்து விசாரணைக்கு எடுத்து கொள்ளக்கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் கோரிக்கை வைக்கப்பட்டபோது, வழக்கை பிப்ரவரி 6ம் தேதி விசாரனைக்கு எடுத்துகொள்வதாக தலைமை நீதிபதி அறிவித்தார். அதன்படி வழக்கு விரைவில் விசாரணைக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.