ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு, அப்போலோ நிர்வாகம் காரசார வாதம்

ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு, அப்போலோ நிர்வாகம் காரசார வாதம்

ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு, அப்போலோ நிர்வாகம் காரசார வாதம்
Published on

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான வழக்கில், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைபிடியிலிருந்து விலக்கு அளிக்க கோரி அப்போலோ நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தொடரப்பட்டிருந்தது. அந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு முன்பு விரிவாக விசாரிக்கப்பட்டு வருகிறது. அப்படி இன்று அந்த மனு விசாரிக்கப்பட்டபோது, அதை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்.

தீர்ப்பு வழங்கப்படுகையில், ‘ஆணையத்தின் செயல்பாடு, மருத்துவ குழு அமைப்பது, அனைத்து தரப்பும் ஆணையத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவது’ உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவான தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர். முன்னதாக ‘ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கின்றது. வேண்டுமென்றே தகவல்களை வெளியே கசிய விடுகிறது’ உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அப்போலோ மருத்துவமனையின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் முன் வைக்கப்பட்ட நிலையில், அதனை தமிழக அரசு மற்றும் ஆறுமுகசாமி ஆணையம் முற்றிலுமாக மறுத்திருந்தது.

இதற்கிடையில், கடந்த 25 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றபோது, ஆறுமுகசாமி ஆணையம் மிகச்சிறிய அலுவலகத்தில் செயல்பட்டு வருவது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், கூடுதல் வசதிகளுடன் புதிய அலுவலகத்தை ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இந்நிலையில், தான் இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, “தற்பொழுது உள்ள ஆறுமுகசாமி ஆணையத்தின் அலுவலகத்திற்கு பதில் 700 சதுர மீட்டர் பரப்பில் அளவிலான கூடுதல் இட வசதியுடன் கூடிய அலுவலகம் அமைத்து தரப்பட்டு உள்ளது” என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “ஆறுமுக சாமி ஆணையத்திற்கு நீங்கள் இன்னும் சிறப்பான ஏற்பாடுகளை செய்து தரவேண்டும் என நினைக்குறோம். இப்போது நீங்கள் செய்து கொடுத்துள்ளது போதுமானதாக இல்லை. உணவு மேஜை அமைத்து கொடுத்திருக்கிறீர்கள். அது போதுமா? ஆணைய அறை நீதிமன்ற தோற்றம் போல் இருக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தல் வழங்கினர்.

இதனையடுத்து அப்போலோ நிர்வாகத்தின் சார்பில், “அனைத்து சாட்சியங்களையும் குறுக்கு விசாரணை செய்ய எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்” என வாதங்களை முன்வைத்தனர். அதற்கு தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பினை பதிவு செய்தனர். குறிப்பாக தமிழக அரசு தரப்பில், “அப்போலோ, சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது. அனைத்து சாட்சிகளையும் விசாரிக்க வேண்டும் என்று கூறுவது விசாரணையை இழுத்தடிப்பதாகும். நாங்கள் ஆணைய விசாரணை விரைவாக முடிந்து மக்களுக்கு விரைவாக உண்மைகள் தெரிய வேண்டும் என நினைக்கிறோம்” எனக்கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிபதி அப்போலோ நிர்வாகத்தை நோக்கி, “எத்தனை சாட்சியங்களை குறுக்குவிசாரணை செய்ய வேண்டும் என நினைக்குறீர்கள்? அதனை அறிக்கையாக எங்களிடம் தாக்கல் செய்யுங்கள்” என உத்தரவிட்டனர்.

இந்த விவகாரத்தில் ஆணையத்திற்கு உதவுவதற்காக மருத்துவ குழு அமைக்கப்படும் என நீதிபதிகள் கூறிய போது, “நாங்கள் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநருடன் பேசி ஆணையத்திற்கு உதவ மருத்துவ குழுவில் இடம் பெறுபவர்களை தேர்ந்தெடுக்கிறோம்” என தமிழக அரசு வாதிட்டது. அதனை எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனரை முடிவு செய்யட்டும் என நீதிபதிகள் பதிலளித்தனர். இதைத்தொடர்ந்து ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில், “விசாரணையின் போது அனைத்து தரப்பும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தொடர்ந்து விசாரணையை இழுத்தடிக்க முயற்சிக்க கூடாது” என்று கோரிக்கை வைத்தது.

இதனையடுத்து ‘ஆணையத்தின் செயல்பாடு - மருத்துவ குழு அமைப்பது - அனைத்து தரப்பும் ஆணையத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விரிவான தீர்ப்பு வழங்கப்படும்’ எனக்கூறி மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர் நீதிபதிகள்.

- நிரஞ்சன் குமார்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com