குஜராத் அரசுடனான பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதாக பெப்சி அறிவித்துள்ளது.
பெப்சி நிறுவனம் "லேஸ் சிப்ஸ்" தயாரிப்பிற்காக பிரத்யேக உருளைக்கிழங்கு வகையை பயன்படுத்தி வருகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு பெப்சி நிறுவனம் எப்.எல் 2027 என்ற புது வகை உருளைக்கிழங்கை கண்டறிந்து அதற்கு காப்புரிமை பெற்றது. அதன் பின் லேஸ் சிப்ஸுக்காக இந்த வகை உருளைக்கிழங்கை உற்பத்தி செய்ய சில விவசாயிகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.
இந்நிலையில் காப்புரிமை பெறாமல் லேஸ் சிப்ஸ் வகை உருளைக்கிழங்குகளை பயிரிட்டதாக குஜராத் விவசாயிகள் மீது பெப்சி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 4 விவசாயிகளிடம் இருந்து ரூ.1 கோடி கேட்டு அகமதாபாத் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. லேஸ் சிப்ஸ் உருளைக்கிழங்கு (FC5) தங்களது நிறுவனத்தின் காப்புரிமை விதை என்றும் அதை மற்றவர்கள் பயிர் செய்ய உரிமை இல்லை என்றும் பெப்சி நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் ஏற்கெனவே பயிரிட்ட உருளைக்கிழங்கையும், விதைகளையும் திருப்பி கொடுத்துவிட வேண்டுமென கூறியது. மேலும் பயிரிட்ட விவசாயிகளிடம் "நீங்கள் எங்களுக்குப் பணியாற்றுங்கள். அல்லது வேறு வகையான உருளைக் கிழங்குகளைப் பயிரிடுங்கள்" எனத் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இந்த விவகாரம் நாடுமுழுவதும் உள்ள விவசாயிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்போம் என குஜராத் மாநில அரசு தெரிவித்தது.
இந்நிலையில், குஜராத் அதிகாரிகள் பெப்சி நிறுவனத்தினருடன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குஜராத் அரசுடனான ஆலோசனைக்குப் பின்னர் விவசாயிகள் மீதான வழக்கை திரும்ப பெறுவதாக பெப்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.