பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களின் நேரத்தை வீணடிப்பதை விடுத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரவேண்டும் என காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் உள்ள தம் சொந்தத் தொகுதியான அமேதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது விவசாயிகள் மற்றும் வேலையில்லாத இளைஞர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு மோடியால் தீர்வு காண முடியாவிட்டால் அவர் தம் தோல்வியை ஒப்புக்கொள்ளவேண்டும் என்று பேசினார்.
மேலும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என பிரதமர் மோடி வாக்களித்ததாகவும், இதுவரை அந்த வாக்குறுதியை அவரால் நிறைவேற்ற முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதே போல் இந்த வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி ஆறு மாதத்திற்குள் செய்துமுடிக்கும் எனவும் ராகுல் கூறியுள்ளார். இந்தியாவில் நாளொன்றுக்கு 400 பேருக்கு மட்டும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் போது சீனாவில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.