பண்டிகை காலத்தில் சமையல் எண்ணெய் விலை நாடு முழுவதும் கடுமையாக உயந்துள்ளது. இதனால் பண்டிகை நேரத்தில் பலகாரம் செய்வோருக்கு சுமை கூடும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாமாயில் விலை ஒரு லிட்டருக்கு சுமார் 35 ரூபாய் அதிகரித்துள்ள நிலையில், வடமாநிலங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் கடுகு எண்ணெயின் விலை லிட்டர் 140 ரூபாயிலிருந்து தற்போது 180 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடலை எண்ணெய் லிட்டருக்கு பத்து ரூபாய், சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய் விலை ஒரே மாதத்தில் லிட்டருக்கு 25 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. உள்நாட்டில் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி அதிகரிக்காத நிலையில், சமையல் எண்ணெய் தேவையில் கிட்டத்தட்ட 60% இறக்குமதி மூலம் சந்தைக்கு வருகிறது.
சமீபத்தில் பாமாயில் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டதும் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது. சுத்திகரிக்கப்படாத பாமாயில் மீதான இறக்குமதி வரி 5.5 சதவீதத்திலிருந்து 27.5 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் மீதான வரி 13.7 சதவீதத்திலிருந்து 35.7 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் - ரஷ்ய போர் காரணமாக சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், மலேசியா, இந்தோனேசியா நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பாமாயில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. ஏற்கெனவே தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகளின் விலை உயர்வு காரணமாக பணவீக்கம் சாமானிய மக்களை அதிகம் பாதித்து வருகிறது.
செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் ஒன்பது மாதங்களில் இல்லாத அளவாக 5.5% என்கிற உச்சத்தை எட்டி உள்ளது. இந்நிலையில் சமையல் எண்ணெய் விலை அதிகரிப்பு உணவுக்கான செலவை மேலும் கூட்டி உள்ளது.