கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாகவும், அணையில் இருந்து திடீரென தண்ணீர் திறந்துவிடப்பட்டதாலும் குஜராத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. இதில் நர்மதா, அங்கலேஷ்வர், பரூச் ஆகிய பகுதிகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த செப். 20ஆம் தேதி அம்மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரான குன்வர்ஜி ஹல்பதி, வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடுவதற்காகச் சென்றுள்ளார். அவருடன் பரூச் தொகுதி பாஜக எம்.எல்.ஏ ரமேஷ் மிஸ்திரியும் உடன் சென்றுள்ளார். அன்றைய தினம் நர்மதாவில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளைப் அவர்கள் பார்வையிட்டபோது, பொதுமக்கள் அவர்களைச் சூழ்ந்து நின்றபடி எதிர்த்துக் கேள்வி கேட்டனர். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
அவர்களுக்கு எதிராக பொதுமக்கள் வேதனையைக் கொட்ட, அதற்கு அமைச்சர் அவர்களைச் சமரசம் செய்ய முயல்கிறார். ஆனால் அமைச்சரிடம் அவர்கள் குமுறுகின்றனர். அதில் ஒருவர், ’என்ன பார்க்க இங்கு வந்தீர்கள்? இப்பகுதியின் நிலையைப் பாருங்கள். சொத்துக்களை இழந்திருப்பதுடன், நாங்களே சுத்தம் செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது’ எனக் குமுறுகிறார். இந்த வீடியோதான் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து எம்.எல்.ஏ. ரமேஷ் மிஸ்திரி, “பரூச்சில் உள்ள பழைய டவுன் பகுதியின் 7வது வார்டுக்கு அமைச்சர் ஹல்பதியுடன் சென்றிருந்தேன். ஊரில் வெள்ளம் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியதால் மக்கள் இயல்பாகவே கோபப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர், அரசாங்கம் தன்னால் முடிந்ததைச் செய்கிறது என்று அமைச்சர் அவர்களுக்கு உறுதியளிக்க முயன்றார். ஆனால், அவர்கள் கோபப்பட்டனர். அவர்களை, மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவர நாங்கள் பணியாற்றி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.