பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிரான மனு.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சென்னை மெரினா கடற்கரையில் தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக 81 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ‘சென்னை மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரி மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ’மெரினா கடற்கரையில் 134 அடி உயரத்துக்கு சின்னம் அமைப்பது கடலோர ஒழுங்கு முறை மண்டல விதிகள் அனைத்தையும் மீறிய நடவடிக்கை. காலநிலை மாற்றத்தால் அதிக மழைப் பொழிவு ஏற்படுகிறது. இந்த நேரத்தில் இவ்வாறான தேவையில்லாத, முக்கியத்துவமற்ற கட்டுமான திட்டங்கள் கடலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். எனவே பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தார். மேலும், ‘நாடு முழுவதும் கடற்கரை அருகே கட்டுமானத்துக்குத் தடை விதிப்பதோடு, கடல் அரிப்பைத் தடுக்கும் விதமாக கடற்கரை ஓரங்களில் அதிக அளவிலான மரங்களை நடுவதற்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒடிசா உள்ளிட்ட கடலோர மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு முன்பு இன்று (ஜூலை 10) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயசுகின், இதேபோல் மற்றொரு மனு நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார். அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ’தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்து வருவதால், மனுதாரர் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் 2 ஆண்டுகள் தடை விதித்துள்ளது’ எனக் குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், “இது என்ன மாதிரியான மனு? இதை ஏன் தாக்கல் செய்தீர்கள்? பொதுநலனைக் கருத்தில்கொண்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த மனுவில் நாங்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறோம்” என கூறினார். தொடர்ந்து மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.