உடுப்பி பெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்தரின் உடல் பக்தர்களின் இறுதி அஞ்சலிக்குப் பின் பாரம்பரிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.
கர்நாடகாவில் உள்ள உடுப்பி கிருஷ்ணர் கோயிலை நிர்வகித்து வரும் எட்டு மடங்களில் பெஜாவர் மடமும் ஒன்று. இந்த மடத்தின் மடாதிபதியான விஷ்வேஷ தீர்த்தர் , இஸ்லாமியர்களுக்கு இஃப்தார் விருந்து அளித்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியவர். அண்மை காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விஷ்வேஷ தீர்த்தர் 88 ஆவது வயதில் முக்தியடைந்தார்.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, கர்நாடக முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பக்தர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக பெங்களூருவில் உள்ள தேசிய கல்லூரி மைதானத்திற்கு பத்மாசனமிட்ட நிலையில், ஒரு கூடையில் வைத்து அவரது உடல் கொண்டு வரப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பக்தர்களுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், மாநிலம் முழுவதும் இருந்து பல்வேறு மடங்களைச் சேர்ந்த மடாதிபதிகளும் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து அவரது உடல் பாரம்பரிய முறைப்படி பெங்களூருவில் உள்ள வித்யாபீடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.