ஆந்திராவின் இப்டாம் என்ற கிராமத்தில் சாலை விரிவாக்க பணிகளுக்காக ஆந்திர அரசால் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. வீடுகளை இழந்த பொதுமக்களுக்கு ஆறுதல் கூற, தனது ஆதரவாளர்களுடன் ஜனசேனா கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் சென்ற காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பவன் கல்யாண் அங்கு செல்லவுள்ளார் என்று தெரிந்ததும், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்திருக்கிறது. அத்துடன் அவரது வருகையையொட்டி, நேற்று அதிகாலையில் இருந்தே அங்கு அவரது ஆதரவாளர்கள் இப்டாம் கூடத்தொடங்கிவிட்டனர். ஆனால் அவரது நிகழ்ச்சிக்கு காவல்துறை தரப்பில் அனுமதியளிக்கப்படாமலும் இருந்திருக்கிறது. அதைமீறி அவர் காரில் சென்றுள்ளார். தனது காரில், பாதுகாப்பற்ற முறையில் மேற்கூரையின்மீதேறி அமர்ந்தபடி பவன் கல்யான் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அந்தக் காட்சிகளின்படி அவருடன், காரின் இரு பக்கமும் அவரது ஆதரவாளர்களும் பாதுகாப்பற்ற முறையில் தொங்கியபடி செல்கின்றனர். கூடவே, வீடியோகிரஃபர், ட்ரோன் கேமிரா பதிவு என்று பயணித்திருக்கிறார் பவன் கல்யாண். இவரது வாகனத்தை போலவே 10 கார்களும், அதிலும் தொங்கியபடி அவரது ஆதரவாளர்களும் செல்கின்றனர். இவர்களுடன் பைக்கில் ஹெல்மேட் ஏதும் அணியாமல் வேகமாக பயணிப்போரும் இருக்கின்றனர். பார்ப்போரை அச்சுறுத்தும் வகையிலான இந்தக் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பவன் கல்யாண், சம்பவ இடத்துக்கு செல்ல அனுமதியும் மறுக்கப்பட்டிருந்தது என்பதால், அவரை வழியிலேயே மடக்கி `உங்களுக்கு அனுமதி இல்லை’ என்று கூறி, அவரது வாகனத்தை போலீசார் நிறுத்த முயன்றுள்ளனர். இதனால் பவன் கல்யாண், இப்டாம் கிராமத்திற்கு சில தூரம் நடந்தே சென்றிருக்கிறார்.
இதற்கிடையே பவன் கல்யாணின் ஆதரவாளர்கள், குறிப்பாக அவரது ஜனசேனா கட்சியின் தொண்டர்களுக்கும் பாதுகாப்புக்காக நின்றுக்கொண்டிருந்த காவல்துறையினருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனாலும் பவன் கல்யாண் நடந்து சென்றதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட தூரத்துக்குப் பின், பவன் கல்யாண் தனது வாகனத்தை பின்னால் நிறுத்திவிட்டு கிராமத்திற்குள் நடைபயணமாக சென்றதாக தெரிகிறது.
இப்டாம் கிராமத்தில் வீடு இடிக்கப்பட்டதன் பின்னணியாக, பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி (கடந்த மார்ச் 14 ஆம் தேதி அக்கட்சி உருவான தினத்தையொட்டி) நடத்திய பொதுக்கூட்டத்தை தங்களின் இடத்தில் நடத்துவதற்கு மக்கள் அனுமதி வழங்கியிருந்ததே காரணம் என அக்கிராம மக்கள் சிலர் தெரிவிப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே, பவன் கல்யாணே நேரில் சென்றுள்ளார். அங்கு சென்றவர், மக்களை அரசின் நடவடிக்கைக்கு எதிராக அணிதிரட்டினார்.
மேலும் தொடர்ந்து வீடுகள் இடிக்கப்பட்டது குறித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (YSRC) அரசாங்கத்தின் மீது பவன் கல்யாண் கடுமையான கண்டனங்களையும் வெளிப்படுத்தினார். அவர் பேசுகையில், “சாலைகளை விரிவுபடுத்துவதற்காக இந்த கிராமத்தின் வீடுகளை இடிக்க, இது என்ன ராஜமுந்திரியா அல்லது காக்கிநாடாவா? ஜனசேனா கட்சியை ஆதரிப்பதற்காக கிராம மக்களை அச்சுறுத்தும் நோக்கில் இந்த இடிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
வீடுகள் இடிக்கப்பட்டதால் ஏற்படும் விளைவுகளால் அங்கிருப்போர் பாதிக்கப்படாமல் இருக்க, இந்த அரசாங்கம் உடனடியாக வழிவகுக்க வேண்டும்” என அறிவுறுத்தினார். இந்நிலையில் சினிமா காட்சி போல இப்டாம் கிராமத்துக்கு பவன் கல்யாண் சென்றது விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.
பலரும், “பவன் கல்யாண் நமக்கு தரும் செய்தி என்ன?? பவன் கல்யாணை கண்டு, பலரும் உத்வேகம் பெறுவர். அப்படியிருக்கையில் இப்படி அவர் பயணிப்பது, மிகவும் ஆபத்தான செயல். கண்டிப்பாக ஊக்குவிக்கப்படாது.. பொது இடங்களில் இதுபோன்ற செயல்களைச் செய்வதற்கு முன், உங்கள் ரசிகர்களைத் தவிர்ப்பது அல்லது எச்சரிப்பது நல்லது” என்று இணையம் வழியாக தெரிவித்து வருகின்றனர்.