சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடுவை சந்தித்ததும் பவன் கல்யாண் எடுத்த முடிவு!

ஆந்திராவில் அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை தெலுங்கு தேசம் கட்சியும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் இணைந்து சந்திக்க முடிவெடுத்துள்ளன.

ஊழல் வழக்கில் கைதான ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ராஜமஹேந்திரவரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அவரை ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண், தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளரும் சந்திரபாபுவின் மகனுமான லோகேஷ், ஹிந்துபூர் எம்.எல்.ஏவும் நடிகருமான பாலகிருஷ்ணா சந்தித்துப் பேசினார்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த பவன் கல்யாண், ஆந்திராவில் அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை தெலுங்கு தேசம் கட்சியும் ஜனசேனா கட்சியும் இணைந்து சந்திக்க முடிவெடுத்துள்ளதாக கூறினார்.

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சி தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால், இந்த முடிவை எடுத்துள்ளதாக பவன் கல்யாண் கூறினார். சந்திரபாபு நாயடுவை சிறையில் சந்தித்தது ஆந்திர அரசியலில் முக்கியத்துவமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதுவரை தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த ஜனசேனா கட்சி, தற்போது சட்டமன்றத் தேர்தலை தெலுங்கு தேச கட்சியுடன் இணைந்து சந்திக்க முடிவெடுத்துள்ளது. இதனால் சட்டமன்றத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com