யோகா குருவான பாபா ராம்தேவ், ‘பதஞ்சலி’ என்ற பெயரில் தம் தயாரிப்புகளை மக்கள் மத்தியில் கொண்டுபோய்ச் சேர்க்கவும், பிரபலப்படுத்தவும் தவறான மற்றும் முறைகேடான விளம்பரங்களை வெளியிடுவதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத மருந்துகளுக்கான விளம்பரங்களில் தவறான தகவல்கள் இடம்பெறுவதைத் தடை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதுகுறித்த விசாரணையின்போது, ‘பதஞ்சலி’ நிறுவனம் ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றத்திடம் குட்டு வாங்கி வருகிறது. சமீபத்தில், மன்னிப்பு குறித்து செய்தித்தாள்களில் மிகக் குறுகிய அளவில் விளம்பரம் வெளியிட்டிருந்தது.
இதுகுறித்து, நாளிதழ்களில் வெளியிடப்பட்ட பொதுமன்னிப்பு கோரும் விளம்பர நகலை பதஞ்சலி நிறுவன வழக்கறிஞர் தாக்கல் செய்தார். கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி இதன் விசாரணை தொடங்கிபோது, அதைப் பார்த்த நீதிபதிகள், ”மன்னிப்பு கோரும் விளம்பரங்கள் பூதக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் அளவுக்குச் சிறிதாக உள்ளது. பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்களை இதுபோன்ற சிறிய அளவில்தான் வெளியிடுவீர்களா” என்று கேள்வி எழுப்பிய அவர்கள், ”பொருளை விளம்பரப்படுத்துவதுபோல, மன்னிப்பும் மிகப்பெரிய அளவில் புதிய விளம்பரமாக வெளியிட்டு அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், ’பதஞ்சலி’ நிறுவனம் இன்று (ஏப்ரல் 24), 67 தேசிய செய்தித்தாள்களில் மீண்டும் பொதுமன்னிப்பு கோரி விளம்பரம் செய்துள்ளது. இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் இந்த விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக நோட்டீஸுக்கு பதிலளிக்காததால், அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. அடுத்து, அவர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட பிரமாணப் பத்திரம் திருப்தி அளிக்கவில்லை என தெரிவித்த நீதிபதிகள், “மன்னிப்பு என்ற பெயரில் எதையாவது எழுதிக் கொடுத்துவிட்டு தப்பித்து விடலாம் என நினைக்காதீர்கள்” என பாபா ராம்தேவ் தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததுடன், புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
அதற்குப் பிறகு நடைபெற்ற விசாரணையின்போது, ”மற்ற மருந்து முறைகளை இழிவுபடுத்த அதிகாரம் வழங்கியது யார்” என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதுடன், பதஞ்சலி நிறுவனம் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கேட்கவும் உத்தரவிட்டப்பட்டது. அந்த விளம்பரம் மிகவும் சிறியதாக இருந்ததாலேயே உச்ச நீதிமன்றம் அதையும் பெரிதாக வெளியிட உத்தரவிட்டிருந்தது. அதன்படியே, தற்போது விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.