ஜம்மு மற்றும் பண்டாரா இடையே இயங்கும் முக்கியமான ரயில்களில் ஒன்று சுவராஜ் எக்ஸ்பிர்ஸ். இந்த ரயில் அம்பாலா ரயில் நிலையத்தை வந்தடைந்து சில நிமிடங்கள் நின்றது. மீண்டும் ரயிலை இயக்கலாம் என நினைத்து ஓட்டுநர் இயக்க முயன்ற போது யாரோ ஜெயினை இழுத்து ரயிலை நிறுத்த முயன்றது தெரிய வந்தது. ஏன் திடீரென் இது போன்று நடக்கிறது என தெரியாமல் குறிப்பிட்ட பெட்டிக்கு சென்று ஓட்டுநர் விசாரிக்க சென்ற போது பயணிகள் யாரையும் காணவில்லை
பயணிகள் அனைவரும் ரயிலின் முன் நின்று கொண்டு கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். பதறிப்போன ஓட்டுநர் உடனடியாக ரயில் நிலைய மேலாளருக்கு தகவல் கொடுத்தார். அவரும் உடனடியாக வந்து ஏன் இந்த போராட்டம் என கேள்வி எழுப்பினார். அவ்வளவுதான் பயணிகள் கொந்தளிக்க ஆரம்பித்தனர். ”ஏசி படுக்கை என டிக்கெட் வாங்கும் அனைவரும் சில அடிப்படை வசதிகளோடு பயணிக்க நினைப்பார்கள், இங்கு ஏசி வருகிறது, ஆனால் கூடவே நாற்றமடிக்கிறது, என்ன என்று பார்த்தால் கழிவறை சுத்தம் செய்யாததால் நாற்றம், பெட்டி கண்காணிப்பாளரிடம் எத்தனை முறை சொன்னாலும் எந்த நடவடிக்கையும் இல்லை, நாங்களே சுத்தம் செய்ய சென்றால் தண்ணீர் வரவில்லை” என்று மொத்த கதையையும் கொட்டி தீர்த்தனர்.
உடனடியாக சுத்தம் செய்வோர் வரவழைக்கப்பட்டு இரயிலின் அனைத்து கழிவறைகளும் சுத்தம் செய்யப்பட்டன. அதோடு ரயிலில் தண்ணீரும் நிரப்பப்பட்டது. இதனை அடுத்து பயணிகளில் சிலர் மட்டும் சென்று கழிவறையை பார்வையிட்டு சோதனை செய்த பின்னர், போராட்டத்தை கைவிட்டனர். பயணிகளின் இந்த போராட்டத்தால் ரயில் ஏறக்குறைய ஒரு மணி நேரம் அம்பாலா ரயில் நிலையத்தில் நின்றது.