எல்லை அருகே அத்துமீற முயன்ற பாகிஸ்தானின் போர் விமானங்களை இந்திய விமானப் படை விரட்டியடித்துள்ளது. இதனால் ஜம்மு- காஷ்மீர் வான் பகுதியில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் நேற்று காலை புகுந்த இந்திய விமானப் படை துல்லிய தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது. இதில் பயங்கரவாதிகள் பலர் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்தியாவின் இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் எல்லையில் ராணுவ வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் விமானப் படை அத்துமீறுவதை தடுக்கும் வகையில் இந்திய விமானப் படையினர் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் இந்திய அத்துமீறலுக்குத் தகுந்த நேரம் மற்றும் இடத்தை முடிவு செய்து பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் இந்திய எல்லை அருகே அத்துமீற முயன்ற பாகிஸ்தானின் போர் விமானங்களை இந்திய விமானப் படை விரட்டியடித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி ஜம்மு- காஷ்மீர் வான் பகுதியில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜம்மு, ஸ்ரீநகர், லே, பதான்கோட் விமான நிலையங்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. போர் மேகம் நிலவுவதால் இந்தியப் பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் தங்களது பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.