கான்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்ஜய் குமார் அகர்வால். இவர் கடந்த மே 24 ஆம் தேதி பாட்னா - கோட்டா விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளார். இவர் கான்பூரில் இருந்து ஆக்ராவுக்கு ஒரு திருமணி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஏசி மூன்றாம் வகுப்பில் சென்றுள்ளார். அப்போது சுமார் 7.30 மணிக்கு சஞ்ஜய் குமாரை அவரது மனைவி செல்போனில் அழைத்து பேசியுள்ளார். அப்போது சஞ்ஜய் குமார் "எனக்கு உடல் நிலை சரியில்லை, நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிவிடுவேன்" என தெரிவித்துள்ளார்.
பின்பு, அவரது மனைவி தொடர்ந்து பல முறை சஞ்ஜய் குமார் அகர்வாலுக்கு கால் செய்துள்ளார். ஆனால் அவரது செல்போன் தொடர்ந்து "ஸ்விட்ச் ஆஃப்" என வந்துள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக சஞ்ஜய் குமாரின் உடல் 72 மணி நேரம் கழித்து ரயிலின் எஸ் 1 பெட்டியில் உள்ள கழிவறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எப்படி உயிரிழந்த சஞ்ஜய் இவ்வளவு தூரம் பயணித்தார் கிட்டத்தட்ட உயிரிழந்த நிலையில் 1500 கி.மீ. சடலம் ரயிலில் பயணம் செய்துள்ளது.
1500 கி.மீ. தூரத்துக்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்யவில்லையா ? என இந்திய ரயில்வே மீது ஏராளமான கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே போலீஸார் கூறியது "சஞ்ஜய் தன் மனைவியுடன் பேசியப் பின்பு, கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பின்பு, அவர் கழிவறையிலேயே உயிரிழந்துள்ளார்" என தெரிவிக்கின்றனர். கோட்டா ரயில் நிலையத்துக்கு வந்த ரயிலை பணிமனைக்கு அனுப்புவதற்கு முன்பு ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்துள்ளனர். அப்போதுதான் கழிவறையில் சஞ்ஜய் குமாரை சடலமாக மீட்டுள்ளனர்.
இதற்கிடையில் சஞ்ஜயின் மனைவி துடிதுடித்து போயுள்ளார். ரயில்வே பாதுகாப்பு படைக்கு தொலைப்பேசியில் பேசிய அவர் தன் கணவர் ஆக்ராவில் இறங்கிவிட்டாரா என கேட்டுள்ளார், அப்போதும் ரயில்வே பாதுகாப்பு படையினர் கழிவறையை சோதனை செய்து பார்க்கவில்லை. உங்கள் கணவர் இந்த ரயிலில் இல்லை என்றே பதிலளித்துள்ளனர். பின்பு சஞ்ஜய் காணாமல் போனது குறித்து மே 24 ஆம் தேதி கான்பூர் ரயில்வே போலீஸிடம் புகார் கொடுக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, மே 26 ஆம் தேதிதான் சஞ்ஜய் சடலமாக மீட்கப்பட்டார். சஞ்ஜயிடம் இருந்து ரூபாய் 9 ஆயிரம் கைப்பற்றப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்திய ரயிலில் 1500 கி.மீ. தூரத்துக்கு கேட்க ஆளில்லாமல் பயணம் செய்த சம்பவம் ரயில்வேயின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.