சமீபகாலமாக விமானங்களில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளைத் தவிர, அநாகரிகச் செயல்களும் நடைபெற்று வருகின்றன. மேலும் திடீரென உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறுகின்றன. அதேநேரத்தில், அவசரகால வழிக்கான கதவுகளைத் திறக்கும் செயல்களும் நடைபெற்று வருகின்றன. கடந்த செப்.19ஆம் தேதி, டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் பயணித்த மணிகண்டன் என்ற ராணுவ வீரர் ஒருவர், விமானத்தின் அவசரகால கதவைத் திறக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சென்னையில் விமானம் தரை இறங்கியதும், இண்டிகோ ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், 6E-457 என்ற எண் கொண்ட இண்டிகோ விமானம், இன்று (செப்.21) கவுகாத்தியில் இருந்து அகர்தலா நோக்கிச் சென்றது. அதில் 180 பயணிகள் இருந்துள்ளனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதில் பயணித்த ஒருவர் அவசரகால வழிக்கான கதவைத் திறக்க முயன்றுள்ளார். இதைக் கவனித்த மற்றொரு பயணி, அவரின் செயலைத் தடுக்க முயன்றார். ஆனாலும் அவர் கதவைத் திறப்பதில் முயன்றுள்ளார். இதையடுத்து, விமானப் பணிப்பெண்களும் அவரைத் தடுக்க முயன்றனர். அப்போதும் அவர் அந்தக் கதவைத் திறப்பதில் தீவிரமாக இருந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து விமானத்தில் பயணித்த பயணிகளிடம் பதற்றம் தொற்றிக் கொண்டது. ஆதலால், பயணிகள் சிலர் எழுந்து அவரை நோக்கிச் சென்றுள்ளனர். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இறுதியில், அந்தப் பயணி பிஸ்வஜித் தேப்நாத் என அடையாளம் காணப்பட்டு, விமானம் அகர்தலாவில் தரையிறங்கியபோது அவர் கைது செய்யப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் அவர் போதை மாத்திரைகளை உட்கொண்டது தெரியவந்துள்ளது.